தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்துக்கு பல்வேறு பிரபலங்கள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சிம்பு, விஜய் உள்ளிட்ட பலரும் தங்கள் ஆதரவை பல்வேறு வகைகளில் வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில் தமிழக மக்களின் உணர்வுக்காக நாளை உண்ணாவிரதம் இருக்கப்போவதாய் ஏ.ஆர்.ரஹ்மான் சற்று முன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த ஆதரவு இளைஞர்களின் போராட்டத்துக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. இவரது இந்த அறிவிப்பு காரணமாக தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கூட்டமைப்பு சார்பில் அபிராமி ராமநாதன் பன்னீர்செல்வம் இருவரும் இணைந்து அனுப்பி உள்ள அறிக்கையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை (20) தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை படக்காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்கம் நாளை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை, நடிகர் சங்க வளாகத்தில் தங்கள் உணர்வை வெளிபடுத்தும் வகையில் மௌன அறவழி போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.
ஆனால் இதற்க்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பினை மட்டுமே சம்பாதித்திருந்தது. இருப்பினும் நாளை இடம்பெறும் நடிகர் சங்கத்தின் போராட்டத்தில் பலர் கலந்துகொள்ள மாட்டார்கள் என்றே இதிலிருந்து தெரியவருகின்றது.
தமிழ்நாடு சின்னத்திரைக் கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் மெரினா கடற்கரையில் போராட்டத்தினை நடத்திவரும் இளைஞர்கள் யுவதிகள் மற்றும் மக்கள் எதிர்ப்பினை தெரிவித்து தமது ஆதார் அட்டைகள் மற்றும் வாக்காளர் அட்டைகளை கிழித்து எறிந்துள்ளனர்.
‘தமிழர் உணர்வை, பண்பாட்டை மதிக்காத மத்திய அரசின் அடையாளங்கள் எதுவும் எங்களுக்குத் தேவை இல்லை’, ‘இனி நாங்கள் இந்தியர் இல்லை… தமிழர் மட்டுமே..’ என்ற கோஷங்களோடு அந்த அட்டைகளை வீசி எறிந்துவிட்டனர்.
இதுவரை வேறு எந்தப் போராட்டங்களின்போதும் பொதுமக்கள் இப்படி அடையாள அட்டைகளை வீசி எறிந்ததில்லை. இதுபோன்ற உணர்ச்சி மிகுந்த போராட்டத்தைப் பார்ப்பதும் பங்கேற்பதும் இதுவே முதல் முறை என அங்கு வந்த பலர் தெரிவித்திருந்தனர்.