கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15 வரை அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இந்தியாவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் இந்த போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படுகிறது.
இதுதொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் அமீரகத்தில் போட்டியை நடத்துவதற்குரிய முதற்கட்ட பணிகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தொடங்கிவிட்டது.
கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட எஞ்சிய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 19-ம் தேதி முதல் அக்டோபர் 15-ம் தேதி வரை அமீரகத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், அக்டோபர் 17-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை 20 ஓவர் உலக கோப்பை போட்டியை அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடத்த ஐ.சி.சி. முடிவு செய்திருப்பதாகவும், இதில் தொடக்க கட்ட சில ஆட்டங்கள் ஓமனில் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.