தமிழகம் முழுவதும் கடந்த 15 மாதங்களில் கொரோனாவால் 24 லட்சத்து 35 ஆயிரத்து 312 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 23 லட்சத்து 75 ஆயிரத்து 963 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த ஆண்டு முதலே இருந்து வருகிறது. இருப்பினும் இந்த ஆண்டு தான் அதிகளவு பாதிப்பும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன.
அந்த வகையில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கொரோனா தொற்றின் வேகம் மிகவும் அதிகமாக இருந்தது. கடந்த மாதம் அந்த பாதிப்பு கண்கூடாக தெரிந்தது.
கடந்த மாதம் 10-ந்தேதிக்கு பிறகு தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகி வந்தனர். இது அந்த மாதம் முழுவதுமே நீடித்தது.
கடந்த மாதம் 21-ந்தேதி 36,184 பேர் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இது அடுத்தடுத்த நாட்களிலும் குறையாமலேயே இருந்து வந்தது.
இந்த தினசரி பாதிப்பு கடந்த மாதம் 29-ந்தேதிக்கு பிறகு படிப்படியாக குறைய தொடங்கியது. அந்த வகையில் கடந்த மாத இறுதியில் (மே 31-ந்தேதி) கொரோனா பாதிப்பு 27,936 ஆக குறைந்து இருந்தது.
பின்னர் இந்த நோய் தொற்று அதிகரிக்காமல் படிப்படியாக குறைந்து கொண்டே செல்கிறது.
அந்த வகையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து தற்போது வரையில் குணம் அடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளது.
கடந்த மாதம் 31-ந்தேதி அன்று தமிழகத்தில் 3 லட்சத்து ஆயிரத்து 781 பேர் சிகிச்சையில் இருந்தனர். இதன் பிறகு தினசரி பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியது.
அதே நேரத்தில் குணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அந்த வகையில் கடந்த 4-ந்தேதி சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை மேலும் குறைந்து இருந்தது. அன்று 2 லட்சத்து 68 ஆயிரத்து 968 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
கடந்த 20 நாளில் மாநிலம் முழுவதும் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்றவர்கள் பெருமளவில் குணம் அடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். 2 லட்சத்து 19 ஆயிரம் பேர் வரையில் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர்.
இதன் காரணமாக கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் கீழ் சென்றுள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட புள்ளி விவரப்படி தமிழகத்தில் தற்போது 47,318 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சென்னையில் 3,611 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் கடந்த 15 மாதங்களில் கொரோனாவால் 24 லட்சத்து 35 ஆயிரத்து 312 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 23 லட்சத்து 75 ஆயிரத்து 963 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதே போன்று சென்னையில் 5 லட்சத்து 31 ஆயிரத்து 127 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5 லட்சத்து 19 ஆயிரத்து 373 பேர் குணம் அடைந்துள்ளனர்.
சென்னைக்கு அடுத்த படியாக செங்கல்பட்டில் 2,337 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா பாதிப்பு அனைத்து மாவட்டங்களிலும் வேகமாக குறைந்து வருகிறது. கோவை, ஈரோடு மாவட்டங்களிலும் நோய் தொற்றின் வேகம் குறைந்துள்ளது.
நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் 6,162 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் கோவையில் அதிகபட்சமாக 756 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டது. ஈரோட்டில் 641 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் 372 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று தினசரி பாதிப்பு மேலும் குறைந்துள்ளது. தமிழகம் முழுவதும் 5,755 பேருக்கு நேற்று தொற்று ஏற்பட்டுள்ளது.
சென்னையில் 305 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் 698 பேருக்கும், ஈரோட்டில் 597 பேருக்கும் கொரோனா ஏற்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் கடந்த 15 மாதங்களில் 32,051 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 8,143 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். தினசரி உயிரிழப்பும் வேகமாக குறைந்துள்ளது.
கடந்த மாதம் அதிகபட்சமாக 30-ந்தேதி 493 பேர் ஒரே நாளில் பலியானார்கள். தற்போது இந்த உயிரிழப்பு எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 150 பேர் தமிழகம் முழுவதும் பலியாகி உள்ளனர். சென்னையில் 11 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.
கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதத்தில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக சரிந்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் சென்னையில் நோயின் தாக்கம் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கோவை-ஈரோட்டில் மட்டுமே மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் பாதிப்பு அதிகமாக உள்ளது. அதனையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. பொதுமக்களும் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு வருகிறார்கள். இதனால் கொரோனா அறிகுறியோடு ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக செல்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
எனவே இன்னும் தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.