நாட்டின் சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, கொழும்பு – தலங்கம – தலாஹேன தெற்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட விஜயமாவத்தை, ஜயகத் மாவத்தை பகுதிகளும், தலாஹேன வடக்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட ஜயகத் மாவத்தை, சத்சர மாவத்தை, சமனல மாவத்தை, அஞ்சல் பெட்டி சந்தி ஆகிய பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் நுவரெலியா மாவட்டத்தின் நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெட்டபுலா மத்திய பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இரத்தினபுரி மாவட்டத்தின் கஹன்கம கொஸ்கல தோட்டம் மற்றும் போபெத்த பகுதி என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 361 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் நாட்டில் இதுவரை 44,216 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமல் பொது இடங்களில் நடமாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.