நட்சத்திர வீரர் ரொனால்டோவின் கோல் வேட்டை இன்றைய ஆட்டத்திலும் தொடருமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) தொடரில் லீக் சுற்று நிறைவடைந்து தற்போது 2-வது சுற்று போட்டிகள் (நாக்-அவுட்) தொடங்கிவிட்டன.
இதில் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு ஸ்பெயினின் செவில்லி நகரில் நடக்கும் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணியும், ‘நம்பர் ஒன்’ அணியான பெல்ஜியமும் மல்லுகட்டுகின்றன.
பெல்ஜியம் லீக் சுற்றில் ரஷியா, டென்மார்க், பின்லாந்து ஆகிய அணிகளை துவம்சம் செய்து 3 வெற்றிகளுடன் 2-வது சுற்றுக்கு வந்துள்ளது. பலமான அணியாக உருவெடுத்துள்ள பெல்ஜியம் இதுவரை உலக கோப்பை மற்றும் யூரோ கோப்பை எதையும் வென்றதில்லை. இந்த முறை அந்த சோகத்துக்கு விடைகொடுக்கும் முனைப்புடன் உள்ளது. சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் அதை கோலாக்கும் சாமர்த்தியசாலியான ரோம்லு லுகாகு (3 கோல்), ஈடன் ஹசார்ட், கெவின் டி புருன், ஆக்சல் விட்செல் ஆகியோர் அந்த அணியின் நட்சத்திர வீரர்களாக வலம் வருகிறார்கள்.
உலக தரவரிசையில் 5-து இடம் வகிக்கும் போர்ச்சுகல் அணி லீக் சுற்றில் ‘குரூப் ஆப் டெத்’ எனப்படும் கடின பிரிவில் (எப் பிரிவு) இடம் பிடித்திருந்தது. ஹங்கேரியை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த போர்ச்சுகல் அதன் பிறகு ஜெர்மனியிடம் 2-4 என்ற கோல் கணக்கில் அடிவாங்கியது. உலக சாம்பியன் பிரான்சுக்கு எதிரான கடைசி லீக்கில் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்து தனது பிரிவில் 4 புள்ளியுடன் 3-வது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.
கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டாரான போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ அபாரமான பார்மில் உள்ளார். நடப்பு தொடரில் 5 கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ள ரொனால்டோவுக்கு கோல் வேட்கை மட்டும் இன்னும் தணியவில்லை. இன்றைய ஆட்டத்தில் ஒரு கோல் திணித்தால் ஒட்டுமொத்த சர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள் அடித்தவரான ஈரானின் அலி டாயின் (109 கோல்) சாதனையை முறியடித்து விடுவார். அவருக்கு பெப்பே, ரபெல் குயரீரோ, பெர்னர்டோ சில்வா உள்ளிட்டோர் பக்கபலமாக இருக்கிறார்கள்.
மொத்தத்தில் சரிசம பலத்துடன் இவ்விரு அணிகளும் வரிந்து கட்டுவதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. வெற்றி பெறும் அணி கால்இறுதிக்கு தகுதி பெறும்.
இவ்விரு அணிகளும் இதுவரை 18 ஆட்டங்களில் நேருக்கு சந்தித்துள்ளன. இதில் 6-ல் போர்ச்சுகலும், 5-ல் பெல்ஜியமும் வெற்றி பெற்றன. எஞ்சிய 7 ஆட்டம் டிராவில் முடிந்தது. 1989-ம் ஆண்டுக்கு பிறகு பெல்ஜியம் அணி போர்ச்சுகலை வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது கடந்த 32 ஆண்டுகளில் போர்ச்சுகலுடன் 5 முறை மோதியுள்ள பெல்ஜியம் அதில் 3-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டுள்ளது.
முன்னதாக புடாபெஸ்ட் நகரில் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து-செக்குடியரசு அணிகள் சந்திக்கின்றன. போட்டிகளை சோனி சிக்ஸ், சோனி டென் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.