ஹெலன் கெல்லர் (ஜூன் 27, 1880- ஜூன் 1, 1968) புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய அமெரிக்கப் பெண்மணி. இவர் இளம் வயதிலேயே கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தவர்.
ஹெலன் கெல்லர் (ஜூன் 27, 1880- ஜூன் 1, 1968) புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய அமெரிக்கப் பெண்மணி. இவர் இளம் வயதிலேயே கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தவர்.
ஹெலன் கெல்லர், அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள துஸ்கும்பியாவில் 1880-ம் ஆண்டு ஜூன் 27-ம் நாள் பிறந்தார். பிறக்கும் பொழுது ஆரோக்கியமாகவே பிறந்தார். அவர் பிறந்து 19 மாதங்களில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாக கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தார். தனது உணர்ச்சிகளைச் சரியான முறையில் வெளிப்படுத்த முடியாமல் தவித்த ஹெலன் கெல்லர், முரட்டுத்தனமாக நடந்துகொண்டார்.
1887-ம் ஆண்டு, ஹெலன் கெல்லரின் பெற்றோர், அலெக்சாண்டர் கிரகாம் பெல்லை சந்தித்தனர். அலெக்சாண்டர், அவர்களை பார்வையற்றோருக்கான பெர்கின்ஸ் பள்ளிக்கு அனுப்பினார். கிரகாம்பெல், ஆன் சல்லிவன் என்ற ஆசிரியை ஹெலன் ஹெல்லருக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஆன் சல்லிவன், கெல்லரின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அடுத்த 49 ஆண்டுகள் கெல்லரும் சல்லிவனும் ஒன்றாகவே கழித்தனர்.
பிறர் பேசும்பொழுது அவர் உதடுகளில் கை வைத்து அதிர்வுகள் மூலம் அவர் பேசுவதை புரிந்துகொள்ளும் கலையை கெல்லருக்கு சல்லிவன் கற்பித்தார். மேலும், கெல்லரின் உள்ளங்கைகளில் எழுதி, எழுத்துக்களைப் புரிந்து கொள்ள பழக்கினார். இப்படி ஒவ்வொரு பொருளையும் தொட்டு தொட்டுத் உணர்ந்து கற்றார் ஹெலன் கெல்லர். பிறகு சிறிது சிறிதாக எழுத கற்றுக்கொண்ட கெல்லர் கண் பார்வையற்றோருக்கோன பிரெயில் எழுத்து முறையை கற்றுக் கொண்டார். எதையும் விரைவாக கற்றுக்கொள்ளும் திறமை கெல்லருக்கு இயல்பாகவே இருந்தது. பத்து வயது நிறைவதற்கு முன் ஹெலன் கெல்லர், கண் பார்வை அற்றோருக்கான பிரெயில் முறையில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், லத்தீனம் ஆகிய மொழிகளைக் கற்றார்.
1888-ல் ஹெலன் கெல்லர் பார்வையற்றோருக்கான பெர்கின்ஸ் பள்ளியில் சேர்ந்தார். 1904-ம் வருடம், கெல்லர், சல்லிவனுடன் நியூயார்க் சென்று அங்கேயிருந்த காது கேளாதோருக்கான ரைட்-ஹுமாஸன் பள்ளியில் சேர்ந்தார். அங்கு கெல்லருக்கு பேசக் கற்றுத்தர சாராஃபுல்லர் என்ற ஆசிரியை உதவினார். தனது ஆசிரியை சாராஃபுல்லர் பேசும்போது அவரது வாய் உதடுகள் மற்றும் நாக்கின் அசைவுகளைத் தொட்டு தொட்டு உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக பேசக் கற்றுக்கொண்டார் ஹெலன் கெல்லர். தட்டுத் தடுமாறி பேசத் தொடங்கிய அவர் பல ஆண்டுகள் பயிற்சி செய்தார். கடைசிவரை அவரால் தெளிவாகப் பேச முடியவில்லை. ஆனால் ஹெலன் கெல்லர் ஒருமுறைகூட மனம் தளரவில்லை.
மகளிருக்கான கேம்பிரிட்சு பள்ளியில் இணைந்தார். தனியாகப் பாடங்களை கற்றுக்கொண்ட கெல்லர் பல்கலைக் கழகத்திற்கு செல்ல விரும்பினார். 1900-ல் ராட்கிளிஃப் பல்கலைக்கழகம் மிகுந்த தயக்கத்துடன் கெல்லரை சேர்த்துக்கொண்டது. ஆன் சல்லிவனை துணைக்கு வைத்துகொண்டு தொய்வின்றி உழைத்த கெல்லர் 1904-ம் ஆண்டு தன்து 24-வது வயதில் இளங்கலை பட்டம் பெற்றார். கண்பார்வையின்றி காது கேளாமல் பல்கலைக் கழகத்தில் படித்துப் இளங்கலைப் பட்டம் பெற்ற முதற்பெண்மணி என்ற சிறப்பும் பெற்றார்.
ஆஸ்திரிய தத்துவவியலாளரான வில்லம் ஜெருசலம் என்பவர் ஹெலன் கெல்லருடைய எழுத்தார்வத்தை வெளிக்கொணர உதவினார். தனது கல்லூரி நாட்களிலேயே 1903-ல் ‘தி ஸ்டோரி ஆஃப் மை லைப்’ என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார் கெல்லர். தன் வாழ்நாளில் மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார். கல்லூரி நாட்களில் வெளிப்பட்ட ஹெலனின் எழுத்தார்வம் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாய் அவரைத் தொடர்ந்திருந்தது. ‘தி ஸ்டோரி ஆஃப் மை லைப்’ என்ற அவருடைய படைப்பு பெண்கள் இதழொன்றில் தொடராக வெளிவந்து பின் புத்தகமாகப் பதிப்பிக்கப்பட்டது. மராத்தி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட உலகமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, ஹெலனின் படைப்புகளில் இன்றும் தலைசிறந்ததாகப் போற்றப்படுகிறது.
நன்னம்பிக்கை- ஒரு கட்டுரை, நான் வாழும் உலகம், கற்சுவரின் கீதம், இருளிலிருந்து, என் மதம், மாலைக்காலத்து அமைதி, ஸ்காட்லாந்தில் ஹெலன் கெல்லர், ஹெலன் கெல்லரின் சஞ்சிகை, நம்பிக்கை கொள்வோம், ஆன் சல்லிவன் மேஸி- என் ஆசிரியை, திறந்த கதவு போன்றவை அவருடைய பிரசுரமான படைப்புகள் சில. இவை தவிர காது கேளாமை, பார்வையின்மை, சமூகவியல், சமூகம் சார்ந்த பிரச்சனைகள், பெண்ணுரிமை போன்றவை தொடர்பாக பல கட்டுரைகளையும், ஆக்கங்களையும் நாளிதழ்களுக்கும், வாராந்திர, மாதாந்திரப் பத்திரிகைகளுக்கும் பங்களித்தவண்ணமிருந்தார்.
அறிவாற்றலிலும் நெஞ்சுரத்திலும் சாதாரண மனிதர்களுக்கு சற்றும் சளைக்காதவரான கெல்லர், சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் உருவெடுத்தார். இவர் உழைப்பாளர் உரிமைகளையும், சோசியலிச தத்துவத்தையும் ஆதரித்து பல கட்டுரைகளும் புத்தகங்களும் எழுதினார். தன் பெயரிலேயே பார்வையற்றோர் நலனுக்காக லாப நோக்கற்ற அமைப்பை ஏற்படுத்தினார். ஹெலன் தன் வாழ்நாளைக் கண்ணிழந்தோர் மற்றும் காதுகேளாதோர்க்காகச் செலவிட்டார். அதற்காக, அல்லும் பகலும் அயராது உழைத்தார்.
அவர்களுக்கென பள்ளிகள் திறக்கச் செய்யும் பொருட்டு மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் உலக நாடுகள் பலவற்றுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஹெலன் கெல்லர், ஆன் சல்லிவனுடன் 39 நாடுகளுக்குச் சென்றுள்ளார். ஹெலன் கெல்லர் நிதி என்ற பெயரில் நிதி ஒன்றினைத் தொடங்கி, அதில் சேர்ந்த தொகையான ரூபாய் ஒன்றரை கோடியை பள்ளிகளுக்கு வழங்கினார். பார்வையற்றோர்க்கென தேசிய நூலகம் ஒன்றனை உருவாக்கி, உலகம் முழுவதிலும் இருந்து நூல்கள் வந்து குவிய ஏற்பாடு செய்தார். தன்னைப்போல அவர்களும் மீட்சி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் தன் எண்பத்தெட்டு வயது வரை அயராது உழைத்தார்.
ஆன் சல்லிவன் ஹெலன் கெல்லருக்கு ஆசிரியராக சேர்ந்தது முதல் நீண்ட நாள் அவருடனே தங்கினார். 1905-ல் அவர் ஜான் மேக்கி என்பவரை மணந்தார். ஆனால் 1914-ல் இருந்து சல்லிவனின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. எனவே பாலி தாம்சன் என்ற ஸ்காட்லாந்துநாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஹெலன் கெல்லருக்கு உதவியாளராகவும் மொழிபெயர்பாளராகவும் வந்து சேர்ந்தார். இவருக்கு காது கேளாதோர் மற்றும் கண்பார்வையற்றோரை பராமரிப்பதற்கான முன்னனுபவம் ஏதும் இல்லாதவராவார். ஆனால் நாளடைவில் இவர் ஹெலன் கெல்லருடைய காரியதரிசியாகவும் ஒரு நல்ல கூட்டாளியாகவும் இறுதிவரை உடனிருந்து பணிபுரிந்தார்.
கெல்லர் குவீன்சிலுள்ள ஃபாரஸ்ட் ஹில் என்ற இடத்திற்கு ஜான், சல்லிவன் மற்றும் பாலி தாம்சனுடன் குடிபெயர்ந்தார். அங்கு தனது இல்லத்தை கண்பார்வையற்றோருக்கான அமெரிக்க நிறுவனமாக மாற்றினார். *ஹெலன் கெல்லர் வாஷிங்டன் நகரின் புகழ்பெற்ற பெண்மணியாகத் திகழ்ந்தார். 1936 ஆம் ஆண்டு நினைவு மீளா நிலையில் ஹெலன் கெல்லரின் கையைப் பிடித்தபடி ஆன் சல்லிவன் உயிர் துறந்தார்.[4] கெல்லர் தனது மொழிபெயர்ப்பாளர் பாலி தாம்சன் என்பவரின் உதவியுடன் வாழ்ந்துவரலானார்; இவர்கள் பின்னர் கன்னக்டிகட் நகருக்குக் குடிபெயர்ந்தனர். இருவரும் இணைந்து உலக நாடுகள் பலவற்றுக்கும் சுற்றுலா மேற்கொண்டு பார்வையற்றோருக்கான நிதி திரட்டினர். 1957 இல் பாலி தாம்சன் பக்கவாத நோயால் தாக்கப்பட்டார். ஆனால் இறுதிவரை அவர் மீள இயலவில்லை. 1960 இல் தாம்சனும் இறந்தார். அதன் பிறகு 1957-ல் பாலி தாம்சனுக்கு உதவிகள் புரிய வந்த வின்னி கார்பல்லி என்ற செவிலியர் ஹெலன் கெல்லரின் இறுதி வரை உடனிருந்தார்.
கெல்லர் ஒரு உலகப் புகழ் பெற்ற பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் திடழ்ந்தார். மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு வழக்குரைஞராகவும் திகழ்ந்தார். அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தந்ததில் ஹெலன் கெல்லரின் பங்களிப்புகள் அதிகமானது. உட்ரோ வில்சனின் எதிர்பாளராகவும் ஒரு சோசலிச வாதியாகவும் விளங்கினார். அமெரிக்க பிறப்புக் கட்டுப்பாடு சங்கத்தின் ஆதரவாளராக தீவிர அரசியலில் ஈடுபட்டார். 1915-ம் ஆண்டு அவர் ஜார்ஜ் கெஸ்லர் இன்பவருடன் இணைந்து ‘ஹெலன் கெல்லர் சர்வதேச அமைப்பு'(HKI) ஒன்றைத் தொடங்கினார்.
இந்நிறுவனம் பார்வை, உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த ஆய்வுகளுக்காக நிறுவப்பட்டது 1920-ம் ஆண்டு அவர் அமெரிக்க உள்நாட்டு உரிமைகளுக்கான ஒன்றியம் (ACLU) ஒன்றைத் தொடங்கினார். 40 நாடுகளுக்கு ஆன் சல்லிவனுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கெல்லர் அடிக்கடி ஜப்பான் சென்று வந்ததால் ஜப்பான் மக்களின் மனங்கவர்ந்த பெண்மனியாக ஆனார்.
கெல்லர் குரோவர் கிளீவ்லேண்ட், லிண்டன் பி ஜான்சன் உள்ளிட்ட பல அமெரிக்க அதிபர்களைச் சந்தித்தார். புகழ்பெற்ற நபர்களான அலெக்சாண்டர் கிரகாம் பெல், சார்லி சாப்ளின், மார்க் டுவெயின் போன்றோருடன் தொடர்பில் இருந்தார். கெல்லர் மற்றும் ட்வைன் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கெல்லர் மற்றும் மார்க் டுவெயின் ஆகியோருடைய கருத்துகளால் இருவரும் தீவிரவாதிகளாகக் கருதப்பட்டனர். ஆனால் இருவருடைய மக்களுக்கான பொதுநலப் பணிகளே மேலோங்கியதால் இவர்களுடைய அரசியல் கருத்துகள் மறக்கப்பட்டன. கெல்லர் அமெரிக்க சோசலிசக் கட்சியின் உறுப்பினராகவும் ஆதரவாளராகவும் இருந்தார்.
ஹெலன் கெல்லர் 1961-ல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் தனது இறுதி நாட்களில் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டியதாயிற்று. 1964, செப்டம்பர் 14-ல் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபர் லின்டண் பி. தாம்சன் அதிபருக்கான சுதந்திரப் பதக்கத்தை ஹெலன் கெல்லருக்கு வழங்கினார். இது அமெரிக்கக் குடியரசின் மிக உயர்ந்த இரு பதக்கங்களுள் ஒன்றாகும். 1965-ல் கெல்லர் நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நாட்டின் மிகச்சிறந்த பெண்மணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கெல்லர் பார்வையற்றோருக்கான நிதி திரட்டுவதிலேயே தனது வாழ்நாள் முழுவதும் ஈடுபட்டார். இன்னும் ஒரு வாரத்தில் தனது 88 ஆவது பிறந்தநாள் வரவிருக்கும் நிலையில் 1968, ஜூன் 1 ஆம் நாள் தூக்கத்திலேயே உயிர் துறந்தார். இவரது சேவையைக் கருதி இவரது உடல் வாஷிங்டன் டி. சியில் ஆன் சல்லிவன், பாலி தாம்சன் ஆகியோர்ரது உடலருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.