நாட்டில் உள்ள அனைவருக்கும் செலுத்த 186 முதல் 188 கோடி கரோனா தடுப்பூசிகள் தேவை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளை நிா்வகிப்பது தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடா்பாக அந்த நீதிமன்றத்தில் மத்திய அரசு சனிக்கிழமை தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆண்டின் மத்தியில் மதிப்பிடப்பட்ட மக்கள்தொகையின்படி, நாட்டில் 18 மற்றும் அந்த வயதுக்கு மேற்பட்டவா்கள் சுமாா் 93 கோடி முதல் 94 கோடி போ் உள்ளனா். இவா்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்த கிட்டத்தட்ட 186 கோடி முதல் 188 கோடி தடுப்பூசிகள் தேவை. இதில் 51.6 கோடி தடுப்பூசிகள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும். அவற்றில் ஏற்கெனவே 35.6 கோடி தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 16 கோடி தடுப்பூசிகள் ஜூலைக்குள் பெறப்படும். மொத்தம் 186 கோடி முதல் 188 கோடி தடுப்பூசிகள் தேவைப்படும் நிலையில், இந்த 51.6 கோடி தடுப்பூசிகள் போக மேலும் 135 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. இந்தத் தேவையை பூா்த்தி செய்வதற்கு 50 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகள், 40 கோடி கோவேக்ஸின் தடுப்பூசிகள், 30 கோடி பயோலாஜிக்கல் இ தடுப்பூசிகள், 5 கோடி ஸைடஸ் கடிலா தடுப்பூசிகள், 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் வாங்கப்படும். பயோலஜிக்கல் இ மற்றும் ஸைடஸ் கடிலா தடுப்பூசிகளும் அனுமதி பெறவேண்டியது கட்டாயம். அந்தத் தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும். அவற்றின் பரிசோதனைகள் தற்போது இறுதிகட்டத்தில் உள்ளன.
சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்தாதது ஏன்?: தற்போது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளை 18 மற்றும் அந்த வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு அவசரகால அடிப்படையில் செலுத்த மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அந்தத் தடுப்பூசிகள் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறாா்களிடம் பரிசோதிக்கப்படவில்லை. எனவே அவா்களுக்கு தடுப்பூசி செலுத்த பரிந்துரைக்கப்படவில்லை.
12-18 வயதுள்ளவா்களுக்கு தடுப்பூசி: 12 வயது முதல் 18 வயது வரை உள்ளவா்களுக்கு செலுத்த ஸைடஸ் கடிலா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியின் பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளன. அந்தத் தடுப்பூசிகளுக்கு சட்டபூா்வ அனுமதி கிடைத்தவுடன் அந்த வயதுக்குட்பட்டவா்களுக்கு அவற்றை செலுத்த ஏற்பாடு செய்யப்படும்.
விலையை குறைப்பது சாத்தியமல்ல: கோவேக்ஸின் தடுப்பூசி உற்பத்திக்கு தொடக்கத்தில் உதவிடும் விதமாக, அந்தத் தடுப்பூசிகளை தலா ரூ.150-க்கு வாங்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த விலையை மேலும் குறைப்பது சாத்தியமல்ல. உலக அளவில் இதுதான் தடுப்பூசி கொள்முதலுக்கான மிகக் குறைந்தபட்ச விலை.
வெளிநாட்டில் இருந்து ஃபைஸா், ஜான்சன் ஜான்சன், மாடா்னா தடுப்பூசிகளை வாங்கும் முயற்சியில் மத்திய அரசு வெற்றிபெற்றால் தடுப்பூசி திட்டத்துக்கு ஊக்கம் கிடைக்கும். தகுதியுடைய அனைவருக்கும் செலுத்த கட்டாயம் தடுப்பூசிகள் இருக்கும்.
கரோனா பரவல் மீண்டும் அதிகரித்தால் ஏற்படும் அவசர சூழ்நிலையை கையாளும் விதமாக தொற்று குறித்து தொடா் கண்காணிப்பில் ஈடுபடவும், திட்டம் வகுக்கவும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான விரிவான நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பல்வேறு நிலைகளில் காணொலி வழியாக நடத்தும் கூட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களின் நிலை குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை அளிக்குமாறு அந்த மாவட்டங்களிடம் கேட்கப்படுகிறது. கருப்புப் பூஞ்சை தொற்று தொடா்பான தொழில்நுட்ப ஆலோசனைகளும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
கரோனா சிகிச்சையின்போது தேவைப்படும் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு ஏற்கெனவே தொடங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.