கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சனிக்கிழமை இரண்டு கத்தோலிக்க தேவாலயங்கள் மர்ம நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
கனடாவில் பூர்வக்குடி மாணவர்களின் அடையாளப்படுத்தப்படாத கல்லறைகள் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் கத்தோலிக்க தேவாலயங்கள் பொறுப்புணர்வு கொள்ள வேண்டும் எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கத்தோலிக்க தேவாலயங்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் மர்ம நபர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சனிக்கிழமை Lower Similkameen பகுதியில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இதன் ஒருமணி நேர இடைவெளியில் Upper Similkameen பகுதியில் ஒரு கத்தோலிக்க தேவாலயமும் தீக்கிரையாக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே Chopaka தேவாலய தீ அருகிலுள்ள புதருக்கு பரவியதாகவும் ஆனால் பிரிட்டிஷ் கொலம்பியா தீயணைப்பு குழுவினர் துரிதமாக செயல்பட்டு தீ பரவுவதற்கு முன்னர் கட்டுக்குள் கொண்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த வார தொடக்கத்தில் ஒகனகன் பகுதியில் இரண்டு கத்தோலிக்க தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்திற்கும் தொடர்பிருக்குமா என்பது குறித்து விசாரிக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.