நாம் கடவுளை தினமும் வணங்குகிறோம். ஆனால் எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும் என்பதை அறிந்திருக்க மாட்டோம். எந்தெந்த கிழமையில் எந்தெந்த கடவுளை வணங்குவது சிறப்பு என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
ஞாயிறு :
கண்ணுக்குத் தெரிந்த கடவுளான சூரியனை வணங்குவது சிறந்தது. ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம் சொல்லி வணங்குவது இன்னும் சிறப்பானது. இதனால் நம்மை அறியாமல் செய்த பாவங்கள் ஒழியும்.
திங்கள் :
திங்கட்கிழமைகளில் சிவாலய தரிசனம் நன்மை தரும். தேவாரம், திருவாசகம், அபிராமி அந்தாதி பாடல்களைக் கொண்டு அம்பிகையையும், சிவபெருமானையும் வழிபடுவது நல்லது. இதனால் நல்ல அந்தஸ்து உண்டாகும்.
செவ்வாய் :
செவ்வாய் கிழமைகளில் சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்தில் ஆறு விளக்குகள் ஏற்றி வழிபடுவதால் நினைத்தது நடக்கும். எதிரிகள் காணாமல் போவார்கள். கந்தசஷ்டி கவசம் படிப்பதும் நன்மை தரும்.
புதன் :
பெருமாளை வணங்குவது நல்லது. இந்நாளில் துளசிமாடத்திற்கு பூஜை செய்ய உகந்த நாளாகும். விஷ்ணு ஸஹஸ்ரநாமம், நாலாயிர திவ்யபிரபந்த பாடல்களைப் படிப்பதும் நன்மை தரும். மேலும், இல்வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கும்.
வியாழன் :
வியாழக்கிழமை நாம் குருவாக எண்ணும் மகான்களைப் போற்றுவதற்கு உகந்த நாள். சாயிபாபா, ராகவேந்திரர், ராமானுஜர், காஞ்சி பரமாச்சார்யாள் போன்ற மகான்களை ஆராதனை செய்ய உகந்த நாள். பகவத்கீதையைப் பொருள் புரிந்து படித்தால் கல்வி மேன்மை பெருகும்.
வெள்ளி :
வெள்ளிக்கிழமைகளில் மஹாலட்சுமி வழிபாடு நன்மை தரும். கோ பூஜை செய்வது, பஞ்சமுக குத்துவிளக்கினை ஏற்றி வைத்து பூஜிப்பது மிகவும் விசேஷம். அம்பிகையின் ஆலயங்களை தரிசிப்பது நன்மை தரும். மேலும் மஹாலட்சுமி ஸ்தோத்ரம், மஹிக்ஷாசுர மர்த்தினி ஸ்தோத்ரம், அன்னபூர்ணா அஷ்டகம் ஆகியவற்றைப் படித்தால் வெகு சுலபத்தில் நாம் எடுக்கும் வேலையில் வெற்றி கிட்டும்.
சனி :
சனிக்கிழமை ஆஞ்சநேயர், கருடாழ்வார், நந்திகேஸ்வரர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் என இறைவனுக்குத் தொண்டு செய்து இறைநிலை அடைந்த அடியவர்களை வணங்குவதற்கு உகந்தநாள். ராமாயணம், மகாபாரதம், சுந்தரகாண்டம், பெரியபுராணம் முதலான நூல்களைப் படித்தறிதலுக்கு உகந்த நாள். இதனால் உடலில் உள்ள நோய்கள் தீரும்.
விநாயகப்பெருமானை எல்லா நாட்களிலும், எல்லா நேரத்திலும் வணங்கலாம். நினைத்தவுடன் நம் மனக்கண் முன் தோன்றுபவர் விநாயகர்.
கிரகண தோஷம் நீங்க..!
சூரியன், சந்திரனை வழிபட்டு, பெற்றோரை கடைசிகாலம் வரை நன்கு பணிவடை செய்து மனம் கோணாமல் பார்த்துக் கொண்டால் கிரகண தோஷம் நீங்கும்.