அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் நேற்று பதவி ஏற்றார். முன்னதாக, ‘மீண்டும் அமெரிக்காவை மாபெரும் நாடாக்குவோம்’ என்ற பொருளில் வாஷிங்டனில் நடந்த விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் அவர் தனது மனைவி மெலானியா டிரம்புடன் கலந்து கொண்டார். அந்த விழாவில் பேசிய அவர் அமெரிக்கர்களை ஒன்றுபடுத்துவதற்கு வாக்குறுதி அளித்தார்.
அப்போது அவர், “நான் கடுமையாக உழைப்பேன் என்ற உறுதியை உங்களுக்கு அளிக்கிறேன் நாம் மீண்டும் சாதனைகள் படைப்போம். நாம் மீண்டும் நம்மவர்களுக்கு வேலைவாய்ப்புகளை கொண்டு வருவோம். நமது வேலைவாய்ப்புகளை இனியும் பிற எந்த நாடும் எடுத்துக்கொள்வதற்கு விட மாட்டோம்” என கூறினார்.
தொடர்ந்து பேசும்போது, “நாம் நமது ராணுவத்தை மிகப்பெரிய ராணுவமாக கட்டமைப்பு செய்வோம். நாம் நமது எல்லைகளை வலிமையாக்குவோம். இதுவரை பல்லாண்டு காலமாக யாரும் செய்திராதவற்றை நாம் செய்து காட்டுவோம்” என கூறினார். லிங்கன் நினைவுச்சின்னத்தில் நடந்த இந்த விழாவில் பங்கேற்க டிரம்ப், மனைவி மெலானியாவுடன் வந்தபோது, அங்குள்ள ஆபிரகாம் லிங்கன் சிலைக்கு வீர வணக்கம் செலுத்தினார்.
வெள்ளை மாளிகைக்கு வந்து சேர்வதற்கான தனது பயணத்தில் 18 மாதங்களாக ஆதரவு அளித்து வந்த அமெரிக்க மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.