மூட்டு பிரச்சனைகள் இருக்கும் போது, அளவுக்கு அதிகமாக கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டால், அது அங்குள்ள திசுக்களை கிழித்து, மூட்டுக்களைச் சுற்றி வீக்கத்தை உண்டாக்கி, வலியை இன்னும் அதிகரிக்கும்.
எலும்பியல் நிபுணர்கள் கூறும் சில உடற்பயிற்சி குறிப்புக்களை மனதில் கொண்டு உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். இதனால் மூட்டு வலியில் இருந்து விடுபட்டு, மூட்டுகளின் ஆரோக்கியமும் மேம்படும்.
முழங்காலில் வலி இருக்கும் போது, அப்பகுதியை வெதுவெதுப்பாகவும், அடிக்கடி ஸ்ட்ரெட்ச் செய்தவாறும் வைத்திருக்க வேண்டும். அதற்கு உடற்பயிற்சி பைக்குகள் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இதனால் முழங்காலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முழங்கால் வலி குறையும்.
குளிர்காலத்தில் மூட்டு வலி ஏற்பட்டால், அப்போது கடினமான ஏரோபிக் பயிற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். இம்மாதிரியான பயிற்சிகள் நிலைமையை இன்னும் மோசமாக்கும். ஆகவே வாக்கிங், ரன்னிங், ஜாக்கிங் போன்ற உடற்பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.
பலரும் எடைப் பயிற்சி மூட்டு வலியை மோசமாக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நிபுணரின் வழிகாட்டலுடன், வார்ம்அப் உடன் எடைப் பயிற்சியை செய்து வந்தால், மூட்டுக்களில் உராய்வு ஏற்படுவது தடுக்கப்படுவதுடன், எலும்பு இழப்பும் தடுக்கப்படும்.
மூட்டு வலி உள்ளவர்கள், நீச்சல் பயிற்சியை மேற்கொண்டு வருவது மிகவும் நல்லது. இதனால் உடல் எடை குறைய உதவுவதோடு, உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மூட்டு வலியும் தடுக்கப்படும்.
மூட்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு ரன்னிங், நீச்சல் பயிற்சி மட்டும் போதாது. யோகா பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். அதிலும் வீரபத்ராசனம், தனுராசனம், தரிகோனாசனம், உட்ராசனம் போன்ற யோகாக்களை செய்வது மிகவும் நல்லது.