பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் பல நாடுகளுக்கு ஜூன் ஒரு விதிவிலக்கான சூடான மாதமாக மாறி இருந்தது.
கடந்த ஜூன் மாதம் 25 ஆம் திகதி முதல், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வெப்பநிலை கிட்டத்தட்ட 50 பாகை செல்சியஸ் (122 எஃப்) ஆக உயர்வடைந்ததால் குறைந்தது 486 திடீர் மரணங்கள் அங்கு பதிவாகியுள்ளன.
ஐக்கிய அமெரிக்காவில் வெப்ப நிலை அதிகரித்து அனல் காற்று வீசி அதிவேக வீதிகளும் மற்றும் மின் இணைப்புகளும் உருகிய நிலைக்கு மாற்றியுள்ளது.
ஜூன் 29 ஆம் திகதி வான்கூவரில் இருந்து 200 கி.மீ (124 மைல்) தொலைவில் உள்ள ஒரு சிறிய நகரமான லிட்டனை 49.6 பாகை செல்சியஸ் (121 எஃப்) வெப்பநிலை தாக்கியது. இது கனடா இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்த வெப்பநிலையை பதிவு செய்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தடுப்பூசி நிலையங்களும் மூடப்பட்டன. அமெரிக்க மாநிலமான ஓரிகானின் எல்லைக்கு தெற்கே, போர்ட்லேண்ட் நகரில் வெப்பநிலை 46.6 பாகை செல்சியஸை (116 எஃப்) கடந்துள்ளது.
முன்னதாக அங்கு 1965 ஆம் ஆண்டில் 41.6 பாகை செல்சியஸ் (107 எஃப்) ஆக வெப்ப நிலை பதிவாகியிருந்தது. இதேவேளை, ஜூன் 22 ஆம் திகதி அன்று , குவைத் நகரமான நுவைசீப்பில் 53.2 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான உலகின் மிக அதியுர்ந்த வெப்பநிலை இதுவாகும். அண்டை நாடான ஈராக்கில் ஜூலை 1 ஆம் திகதி வெப்பநிலை 51.6 பாகை செல்சியஸை எட்டியது.
அதேநேரம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமான் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கில் பல நாடுகளில் 2021 ஜூன் மாதத்தில் 50 செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடம் உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் இதுவரை பதிவான வெப்பநிலையைக் காட்டுகிறது. குறைந்தது 23 நாடுகளில் அதிகரித்த வெப்பநிலையாக 50 பாகை செல்சியஸ் அல்லது அதையும் விஞ்சியுள்ளதை அது வெளிக்காட்டுகிறது.
உலகில் இதுவரையான காலப்பகுதியில் அதிகளவான வெப்பநிலை கடந்த 1913 ஆம் ஆண்டு கலிபோர்னியாவின் மரண பள்ளத்தாக்கில் பதிவானது. அதன்போது அங்கு 56.7 செல்சியஸ் வெப்பம் பதிவுசெய்யப்பட்டது.