கோபா அமெரிக்க கால்பந்து போட்டியின் கால் இறுதியில் பிரேசில்-சிலி அணிகள் மோதின. இதில் பிரேசில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
47-வது கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் நடைபெற்று வருகிறது. கால்இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கியது.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நடந்த கால் இறுதியில் பிரேசில்-சிலி அணிகள் மோதின. இதில் பிரேசில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
46-வது நிமிடத்தில் லுகாஸ் பகியூட்டோ கோல் அடித்தார். இந்த ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டதற்காக பிரேசில் வீரர் கேப்ரியல் ஜீசஸ் சிவப்பு அட்டை காட்டப்பட்டு நடுவரால் வெளியேற்றப்பட்டார். இதனால் ஆட்டத்தின் இறுதிவரை 10 வீரர்களுடன் விளையாடி பிரேசில் இந்த வெற்றியை பெற்றது.
முன்னதாக நடந்த கால் இறுதியில் பெரு-பராகுவே அணிகள் மோதின. ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் போட்டு இருந்தன. கூடுதல் நேரத்திலும் இதே நிலையே நீடித்தது. இதனால் முடிவை நிர்ணயிக்க ‘பெனால்டி ஷூட் அவுட்’ கடைபிடிக்கப்பட்டது.
இதில் பெரு 4-3 என்ற கோல் கணக்கில் பராகுவேயை தோற்கடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றது. 6-ந் தேதி நடைபெறும் முதல் அரையிறுதியில் பிரேசில்-பெரு அணிகள் மோதுகின்றன.
நாளை அதிகாலை நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் உருகுவே- கொலம்பியா, அர்ஜென் டினா-ஈக்வடார் அணிகள் மோதுகின்றன.