வட மாகாண முதலமைச்சருக்கு எதிராக மனித உரிமைகள் அமைப்பின் யாழ். அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சாவகச்சேரி பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபர் சாவகச்சேரியில் கோழி இறைச்சிக்கடை ஒன்றை நடாத்தி வருகின்றார். கடையை நடத்திச் செல்ல நகர சபையால் அனுமதி வழங்கப்பட்ட போதிலும் தற்போது மறுக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகர சபைக்கு வடமாகாண முதலமைச்சரின் அலுவலகம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிருப்தியடைந்த உரிமையாளர் தனது விற்பனை நிலையத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டமைக்கான காரணத்தை முதலமைச்சர் அலுவலகம், நகர சபையினரிடம் கேட்டுள்ளார்.
இது தொடர்பில் எவ்வித பதிலும் கிடைக்காத விடத்து தமக்கு உரிய தீர்வை பெற்றுத்தரும்படி இலங்கை மனித உரிமை அமைப்பின் யாழ் பிராந்திய கிளை அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் மனித உரிமை அமைப்பினர் விசாரணைகைள மேற்கொண்டதுடன் குறித்த விற்பனை நிலையத்தை நேற்றைய தினம் பார்வையிட்டனர்.
அந்தப் பகுதி சுகாதார உத்தியோகத்தர், குறித்த விற்பனை நிலையம் சுகாதார முறைப்படி நடைபெறுவதாகவும் இது தொடர்பில் முறைப்பாடு எவையும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் மனித உரிமை அமைப்பினரிடம் தெரிவித்தனர்.
இதனையடுத்து சாவகச்சேரி நகரசபை செயலாளரிடம் விசாரனைகளை மேற்கொண்ட போது, குறித்த விற்பனை நிலையம் சட்டத்தினடிப்படையில் எவ்வித குறைபாடுகளையும் கொண்டதாக நாம் காணவில்லை இதனாலேயே கடந்த காலங்களில் அனுமதி வழங்கியிருந்தோம் எனினும் முதலமைச்சர் அலுவலகத்தினால் எமக்கு கொடுக்கப்பட்ட கட்டளையின் பேரிலேயே குறித்த விற்பனை நிலையத்தின் இவ்வருட அனுமதியை இரத்து செய்தோம் எனவும் தெரிவித்தனர்.