தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக பாகுபலி நடிகர் பிரபாஸை வைத்து ‘சலார்’ என்ற படத்தை இயக்குகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். பிரபல கன்னட நடிகர் மது குருசாமி, இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள சலார் படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாதம் மீண்டும் தொடங்க உள்ளது.
இந்நிலையில், சலார் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க பாலிவுட் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த படக்குழு, தற்போது நடிகை வாணி கபூரை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் நடிக்கும் முதல் தெலுங்கு படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கேங்ஸ்டர் கதையம்சம் கொண்டு உருவாகும், இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் ரிலீசாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. தெலுங்கு, கன்னடம் ஆகிய இரு மொழிகளில் தயாராகும் இப்படத்தை, தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.