கடந்த வாரம் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு 3 நாட்கள் இந்த பணி நிறுத்தப்பட்டு இருந்தது. பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தடுப்பூசி அனைத்து முகாம்களிலும் போடப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த அளவுக்கு தடுப்பூசி இருப்பு இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து வீடு திரும்புகிறார்கள். நாள் ஒன்றுக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த வாரம் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு 3 நாட்கள் இந்த பணி நிறுத்தப்பட்டு இருந்தது. பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தடுப்பூசி அனைத்து முகாம்களிலும் போடப்பட்டது. வரவழைக்கப்பட்ட 8 லட்சம் தடுப்பூசிகளும் 2 நாட்களில் தீர்ந்துவிட்டன.
நேற்று இருப்பு குறைந்த நிலையில் 66 ஆயிரத்து 679 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது. சனிக்கிழமை அன்று 4.7 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில் நேற்று 66 ஆயிரம் பேருக்கு மட்டுமே செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி இருப்பு இல்லாததால் இன்று முகாம்கள் மூடப்பட்டன. நேற்றே பெரும்பாலான முகாம்களில் தடுப்பூசி இல்லாததால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
சென்னையிலும் இதே நிலை நீடிகிறது. இன்று 3 ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே இருப்பில் இருந்தன. அவற்றை மையங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டு செலுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் அவை தீர்ந்து விட்டதால் காத்திருந்த மக்களுக்கு தடுப்பூசி செலுத்த முடியவில்லை. சென்னையில் உள்ள 64 முகாம்களும் தடுப்பூசி இல்லாமல் இன்று செயல்படவில்லை.
கோவை, திருச்சி, மதுரை, உள்ளிட்ட பல நகரங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நேற்று முதல் நீடித்து வருகிறது. இதுவரையில் ஒரு கோடியே 57 லட்சத்து 41 ஆயிரத்து 118 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.