விரைவில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்த மாநிலங்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.
2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்று 2-வது தடவையாக நரேந்திரமோடி ஆட்சி அமைத்தார்.
பாரதிய ஜனதாவின் ஆட்சி 2 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டாலும் இதுவரை மந்திரிசபையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
பிரதமர் நரேந்திரமோடி கூட்டணி கட்சிகளுக்கும் மந்திரி பதவி வழங்கி இருந்தார். இதன்படி சிவசேனா, அகாலிதளம், லோக்ஜன சக்தி, குடியரசு கட்சி போன்றவையும் மந்திரிசபையில் இடம்பெற்று இருந்தன.
இதில் சிவசேனா, அகாலிதளம் கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகி விட்டதால் அதன் மந்திரிகள் ராஜினாமா செய்தனர். லோக்ஜனசக்தி மந்திரியாக இருந்த ராம்விலாஸ் பஸ்வான் மரணம் அடைந்து விட்டார். இதேபோல மத்திய மந்திரிகள் பலர் மரணம் அடைந்துள்ளனர்.
இதனால் ஏற்பட்ட காலியிடங்களையும் நிரப்பவில்லை. அந்த மந்திரிகள் இருந்த துறைகள் கூடுதலாக மற்ற மந்திரிகளிடம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய மந்திரிகள் சிலருக்கு பணிச்சுமை அதிகமாகி உள்ளது.
விரைவில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்த மாநிலங்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.
இதன் காரணமாக மந்திரி சபையை மாற்றி அமைக்க அவர் திட்டமிட்டார். வருகிற 13-ந்தேதி பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக மந்திரிசபையை மாற்றி அமைக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் முடிவாகும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையே மந்திரிசபை மாற்றி அமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அன்றைய தினம் மாற்றம் செய்யப்படவில்லை. இப்போது மந்திரிசபையை உடனடியாக மாற்றி அமைக்க பிரதமர் மோடி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்.
யார்-யாரை மந்திரிகளாக நியமிப்பது என்பது பற்றி கடந்த 2 நாட்களாக மூத்த தலைவர்களுடன் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். உள்துறை மந்திரி அமித்ஷா, கட்சி தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
கடந்த சனிக்கிழமை மாலையில் பிரதமர் மோடி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். நள்ளிரவு வரை இது நீடித்தது. அதன்பிறகு ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு மீண்டும் கூடி ஆலோசனை நடத்தினார்கள். 6 மணி நேரம் இந்த கூட்டம் நடைபெற்றது.
இன்று மாலை 5 மணிக்கு மறுபடியும் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். பாரதிய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலாசீதாராமன், தர்மேந்திர பிரதான், பிரகலாத் ஜோஷி, பியூஸ்கோயல், நரேந்திரசிங் தோமர் ஆகியோருடன் ஆலோசனை நடத்துகிறார்.
அதில் யார்-யாருக்கு மந்திரி பதவி வழங்குவது என்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும். 19 அல்லது 20 பேருக்கு புதிதாக பதவி வழங்க திட்டமிட்டு உள்ளனர்.
மத்திய மந்திரிசபையில் 81 பேர் வரை நியமிக்க முடியும். ஆனால் தற்போது 53 மந்திரிகள்தான் இருக்கிறார்கள். எனவே 28 மந்திரிகளை புதிதாக நியமிக்கலாம். ஆனாலும் 20 பேர் வரை தற்போது நியமிக்க முடிவு செய்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
காங்கிரசில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு பதவி வழங்கப்படுகிறது. அதேபோல அசாம் முன்னாள் முதல்-மந்திரி சர்பானந்த் சோனாவால், பீகார் மாநில மூத்த தலைவர் சுஷீல்மோடி, நாராயண ரானே, முன்னாள் மத்திய மந்திரி கோபிநாத் முண்டேவின் மகன் பிரீதம் முண்டே, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உதவியாளர் ஒடிசாவை சேர்ந்த அஸ்வினி வைஷ்ணவ், ராகேஷ்சிங், மனோஜ் திவாரி, ஆர்.சி.பி.சிங் சந்தோஷ் குஷ்வகா, ஜம்மு யாங் நம்கையா, லாக்கட் சட்டர்ஜி, சாபர் இஸ்லாம் ஆகியோருக்கும் மந்திரி பதவி வழங்கப்பட இருக்கிறது.
கூட்டணி கட்சிகள் சிலவற்றுக்கும் மந்திரி பதவி வழங்கப்படுகிறது. நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 2 மந்திரி பதவிகள் வழங்கப்பட உள்ளன. லோக்ஜனசக்தியின் புதிய தலைவராகி உள்ள பசுபதி குமார் பராஸ், அப்னா தளத்தை சேர்ந்த அணுபிரியா படேல் ஆகியோரும் மந்திரி ஆகிறார்கள்.
தமிழகத்தில் கூட்டணியில் உள்ள அ.தி.மு.க.வுக்கும் மந்திரி பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுபற்றிய தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
மந்திரி பதவியில் சரியாக செயல்படாத சிலரை நீக்குவதற்கும் பிரதமர் மோடி முடிவு செய்து இருக்கிறார். கடந்த ஜூன் மாதம் 20-ந்தேதி அனைத்து மந்திரிகளுடனான செயல்பாடுகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார்.
ஒவ்வொரு மந்திரியையும் அவர் அழைத்து பேசினார். இதில் செயல்படாத மந்திரிகள் சிலரை அடையாளம் கண்டுள்ளார். அவர்கள் நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய மந்திரிசபை நாளை பதவி ஏற்கலாம் என பாரதிய ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன. ஒரு வேளை நாளை பதவி ஏற்பு இல்லை என்றால் 9-ந்தேதி பதவி ஏற்பு நடைபெறலாம் என்றும் அவர்கள் கூறினார்கள்.