இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர், ஸ்டம்பிங் கிங், மூன்று உலக கோப்பையை வென்ற ஒரே கேப்டனுமான எம்.எஸ். டோனியின் பிறந்த நாள் இன்று.
இன்று தனது 41 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் ‘தல’ எம்.எஸ். டோனி. கபில்தேவுக்கு பிறகு இன்னொரு உலக கோப்பையை வெல்ல இந்திய அணி போராடி கொண்டிருந்த தருணம். இந்திய ரசிகர்களின் 28 ஆண்டு கால ஏக்கத்தை தனது ஒரே ஹெலிகாப்டர் ஷாட்’ மூலம் நிவர்த்தி செய்தவர்தான் எம்.எஸ். தோனி என்ற சகாப்தம்.
இந்திய கிரிக்கெட்டில் 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந்தேதி வங்காளதேசம் அணிக்கெதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். சந்தித்த முதல் பந்திலேயே ரன்அவுட் மூலம் ஆட்டமிழந்தார். இவர் எங்கே ஜொலிக்க போகிறார் என்று இந்திய ரசிகர்கள் நினைக்க, கேப்டன் கங்குலி தொடர்ந்து வாய்ப்பு வழங்கினார்.
அதன்பின் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் நீங்காத இடம் பிடித்தார். அதிரடி, நீளமான தலைமுடி ஆகியவற்றின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். 2006-ம் ஆண்டு டி20யில் அறிமுகம் ஆனார்.
2007-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு தலைமை தாங்கினார். டோனி தலைமையில் இந்திய அணி உலகக்கோப்பையை வென்று சாதித்தது. இதன்மூலம் இந்திய அணி என்றாலே டோனிதான் என்ற அளவிற்கு உயர்ந்தார்.
மின்னல் வேக ஸ்டம்பிங், ஹெலிகாப்ட்டர் ஷாட்ஸ் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டார். எந்தவொரு சூழ்நிலையிலும் கோபத்தை வெளிக்காட்டாமல் புன்னகையை மட்டுமே வெளிப்படுத்துவார். இதனால் அவரை கூல் கேப்டன் என்று அழைத்தனர்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே கேப்டனாக பொறுப்பேற்றும் அசத்தினார். சிஎஸ்கே-வுக்கு விசில் போடுவதை விட, ரசிகர்கள் டோனிக்குதான் விசில் போடுவது அதிகம். இந்தியாவில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இந்திய அணி கபில்தேவ் தலைமையில் 1983-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றது. அதன்பின் 28 ஆண்டுகள் கழித்து இந்திய அணி டோனி தலைமையில் உலகக்கோப்பையை வென்று சாதித்தது.
2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி-யின் சாம்பியன்ஷிப் கோப்பையை இந்திய அணி டோனி தலைமையில் வென்றது. இதன்மூலம் ஐசிசி-யின் மூன்று டிராபிகளை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றார்.
90 டெஸ்ட், 350 ஒருநாள், 98 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள எம்எஸ் டோனி 16 சதங்கள், 105 அரைசதங்களுடன் 17,266 ரன்கள் குவித்துள்ளார்.