கோல்கீப்பர் அபாரமாக செயல்பட, பெனால்டி சூட்அவுட்டில் கொலம்பியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது அர்ஜெண்டினா.
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் 2-வது அரையிறுதி ஆட்டம், இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றது. இதில் அர்ஜெண்டினா- கொலம்பியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
மெஸ்சி தலைமையிலான அர்ஜெண்டினா அணி தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடியது. மெஸ்சி கொடுத்த பந்தை லாட்டாரோ மார்ட்டினெஸ் சுலபமாக கோலாக்கினார். இதனால் 7 நிமிடத்திலேயே 1-0 என அர்ஜெண்டினா முன்னிலை பெற்றது.
அதன்பின் பல வாய்ப்புகள் கிடைத்தும் அர்ஜெண்டினா அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி நேர ஆட்டத்தில் 1-0 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேர ஆட்டம் தொடங்கியதும், 61-வது நிமிடத்தில் கொலம்பியா பதில் கோல் அடித்தது. அந்த அணியின் லூயிஸ் டயாஸ் கோல் அடித்தார்.
அதன்பின் இரு அணி வீரர்களாலும் ஆட்டம் முடியும் வரை கோல் அடிக்க இயலவில்லை. 90 நிமிடம் முடிந்த நிலையில், கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்திலும் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.
இதனால் பெனால்டி சூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இரு அணிகளும் தலா ஐந்து முறை வாய்ப்புகள் வழங்கப்படும். அதில் முன்னிலை பெறும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
முதல் வாய்ப்பில் இரு அணி வீரர்களும் கோல் அடித்தனர். அதன்பின் கொலம்பிய வீரர்கள் அடித்த இரண்டு வாய்ப்புகளிலும் அர்ஜென்டினா கோல்கீப்பர் எமிலியானோ மார்ட்டினெஸ் அபாராக செயல்பட்டு தடுத்தார். இதன் காரணமாக இறுதியில் அர்ஜென்டினா 3-2 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா பிரேசில் அணியை எதிர்கொள்கிறது. கொலம்பியாவின் ஐந்து வாய்ப்புகளில் மூன்று முறை எமிலியானோ மார்ட்டினெஸ் கோல் அடிக்க முடியாமல் தடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.