வெள்ளை மாளிகையில், ட்ரம்ப் குடும்பத்தினரை ஒபாமா குடும்பத்தினர் வரவேற்கும் மரபு விழா, நேற்று நடந்தது.
சம்பிரதாயமான இந்த நிகழ்வில் மிஷெல் ஒபாமாவுக்கு மெலனியா ட்ரம்ப் கொடுத்த அந்தப் பரிசுப் பொருள்!
வெளிர் நீல நிறப் பெட்டியில், வெள்ளை ரிப்பன் சுற்றப்பட்ட ஒரு பரிசுப் பொருளை மெலனியா ட்ரம்ப், மிஷெல் ஒபாமாவுக்கு அளித்தார்.
அந்த அடையாளம், அது விலை உயர்ந்த பொருட்களுக்குப் பெயர்போன ‘டிஃபனி’ நிறுவனத்தின் ஒரு பரிசுப்பொருள் என்பதை உணர்த்தியது.
அதைப் பெற்றுக்கொண்ட போது மிஷெலிடம் வெளிப்பட்ட ரியாக்ஷனுக்கு, சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் கற்பனைக்கு ஏற்ப அர்த்தங்கள் சேர்த்து எழுத, அந்தப் பரிசுப்பொருள் பிரபலமாகி விட்டது.
வெள்ளை மாளிகையின் வாயிலில் தங்களை வரவேற்க நிற்கும் ஒபாமா தம்பதிக்கு, காரில் இருந்து இறங்கி வரும் ட்ரம்ப் தம்பதி கட்டியணைத்து, முத்தமிட்டு அன்பைப் பரிமாறுகிறார்கள்.
அப்போது மெலனியா தான் கையோடு எடுத்து வந்த பரிசுப் பொருளை மிஷெலிடம் கொடுக்க, அதை எதிர்பார்த்திராத மிஷெலின் முகத்தில் ஒரு குழப்பம் உண்டாகிறது.
அதை எங்கு வைப்பது, யாரிடம் கொடுப்பது என்று அவர் சில நொடிகள் திணற, சட்டென அவரிடமிருந்து அந்தப் பரிசை பெற்றுச் செல்லும் ஒபாமா, அதை உள்ளே யாரிடமோ ஒப்படைத்து விட்டு, மீண்டும் வரவேற்புக்கு வருகிறார்.
மிஷெலின் ரியாக்ஷன் ஒரு பக்கம் இருக்க, ‘அது என்ன பரிசாக இருக்கும்?’ என்ற மக்களின் ஆர்வத்துக்கும், கணிப்புகளுக்கும், கற்பனைக்கும் பஞ்சமில்லை.
அது டிஃபனி ஸ்டோரில் வாங்கப்பட்ட ஸ்பூன் அல்லது உண்டியல் அல்லது காபி கோப்பையாக இருக்கும் என பல கற்பனைகளும், கேலிகளும் வலம்வர ஆரம்பித்திருக்கின்றன.
உண்மையில் அது என்ன பரிசு என்பது மெலனியாவுக்கும் மிஷெலுக்குமே வெளிச்சம்.
உலகின் இரண்டு முக்கியமான பெண்கள் சம்பந்தப்பட்ட பரிசு என்பதால் இந்த எதிர்பார்ப்பு!