முதல் ஆறு மாதங்களும் தாய்ப்பால் ஊட்டப்பட்ட குழந்தை பிற்காலத்தில் வரக்கூடிய உடல் பருமன், சர்க்கரை வியாதி, கேன்சர் போன்ற பல வகை வியாதிகளில் இருந்து பாதுகாக்கப்படுகிறது. இந்த உலகத்தில் ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தைகளுக்கென ஓடி ஓடி உழைத்து தரமான கல்வியும் சொத்தும் சேர்த்து வைப்பதே முதற்கடமையாக கொண்டிருக்கிறார்கள்.ஆனால் பெற்றொர்கள் தர வேண்டிய, குறிப்பாக ஒரு தாய் தரவேண்டிய முக்கியமான சொத்து என்ன தெரியுமா? ‘தாய்ப்பால்’ தான். குழந்தைப் பிறந்த ஒரு மணி நேரத்தில் சுரக்கும் சீம்பாலை குழந்தைக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும். ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே தருவது மிக மிக அவசியம். முதல் ஆறு மாதங்களும் தாய்ப்பால் ஊட்டப்பட்ட குழந்தை பிற்காலத்தில் வரக்கூடிய உடல் பருமன், சர்க்கரை வியாதி, கேன்சர் போன்ற பல வகை வியாதிகளில் இருந்து பாதுகாக்கப்படுகிறது.
இயற்கையிலேயே குழந்தைப் பெற்ற ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்ப்பால் நன்றாகவே சுரக்கும்.ஒரு சில பெண்களுக்கு சில தவிர்க்க முடியாத காரணங்களால் தாய்ப்பால் தர இயலாமல் போகலாம்.மற்றபடி, தாய்ப்பால் நன்றாக சுரப்பதற்கும் சுரக்க வைப்பதறக்கும் பல வழிமுறைகள் உள்ளன.பால் கொடுக்கும் தாய் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும்.பருப்பு, பால், நெய், கீரை வகைகள், முட்டை, பழவகைகள், கொட்டைகள் போன்றவை தினமும் உணவில் இருக்க வேண்டும்.நன்றாகத் தண்ணீர் குடிக்கவேண்டும்.
குழந்தை வாய் வைத்து பால் உறிய உறியதான் தாயின் நரம்பு மண்டலத்திற்கு சிக்னல் சென்று நன்றாக பால் சுரக்கும்.அந்த சிக்னல்களை சரியாக அறிவதற்குத் தான் தாய்ப்பால் ஊட்டும்பொழுது பெண்கள் மற்றெந்த சிந்தனையும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று அறிவியல் கூறுகிறது.நம் முன்னோர்களும் இதனால் தான் பால் கொடுக்கும் பொழுது தாயும் சேயும் தனிமையாக ஒரு அறையில் இருக்கவேண்டும் என வலியுறுத்தினார்கள்.
சில பல காரணங்களால் புட்டிப்பாலுக்கு மாறிவிட்டால், அக்குழந்தை மீண்டும் தாய்ப்பாலை ஏற்றுக்கொள்வது மிக மிக கடினமாகிறது.எனவே குழந்தைப்பெற்ற ஒவ்வொரு தாயும் தனது குழந்தைக்கு ஆறு மாதங்கள் முடியும் வரை வெறும் தாய்ப்பால் மட்டுமே தருவேன் என்று உறுதி கொள்ளவேண்டும். பால் கொடுப்பதிலும் குடிப்பதிலும் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் பிரத்யேகமாக இதற்கென்றிருக்கும் “லேக்டேஷன் கன்சல்டன்ட்ஸ்” அதாவது “தாய்ப்பால் ஆலோசகர்” களை அணுகி தீர்வுக் காணலாம்.
தாய்க்கு மார்பகக் காம்பு சரியாக இல்லாதிருத்தல் (அ) சிறியதாக இருத்தல், உள்நோக்கி இருத்தல், பால் கொடுக்கும் பொழுது குழந்தையை சரியான முறையில் வைத்துக்கொள்ளாமை என இவற்றில் எதுவாய் இருந்தாலும் பால் சரியாக சுரக்காது, பால் பத்தாமல் குழந்தை அழுதுக் கொண்டிருக்கும். இந்த சவால்களுக்கு, “லேக்டேஷன் கன்சல்டன்ட்ஸ்” சரியான தீர்வை கற்றுத்தருவார்கள்.இன்று பல மருத்துவமனைகளில் முக்கியமாக தனியார் மருத்துவமனைகளில் இத்தகைய ஆலோசகர்கள் இருக்கிறார்கள்.
தாய்ப்பால் சுரப்பதில் “முன்பால்” “பின்பால்” என இருவிதமாக சுரக்கிறது. பால் கொடுக்க ஆரம்பித்ததிலிருந்து முதல் ஐந்து நிமிடங்களுக்கு “முன்பால்” வரும்.இதில் தண்ணீர் சத்து அதிகமாக இருக்கும்.இதனால்தான் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு தனியாக தண்ணீர் தர தேவையில்லை.இதன் பின்னர் வரும் “பின்பால்” புரதம், கொழுப்பு, கலோரிச் சத்து, வைட்டமின் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்தது. இதுவே குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. எனவேதான் ஒரு பக்கம் முழுமையாக குடித்து முடித்தபின்பு மறுபக்கம் பால் புகட்டவேண்டும், அல்லது ஒருமுறை ஒரு மார்பகத்தில் பால் கொடுத்தால் அடுத்தமுறை தரும்பொழுது அடுத்தப்பக்கம் தர வேண்டும். இவ்வாறு செய்வதனால் குழந்தைக்கு நீர் மற்றும் புரதச் சத்து முழுமையாக கிடைத்து நன்கு வளர உதவும்.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தை பசி நீங்கி நன்கு தூங்க ஆரம்பிக்கும்.ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஏழு முறை சிறுநீர் கழிக்கும்.மூன்று அல்லது நான்கு முறை மலம் கழிக்கும்.தினம் 15–20 கிராம் எடை ஏறும்.சில தாய்மார்கள் குழந்தை பச்சையாக மலம் கழிக்கிறது என்று கவலை கொள்வார்கள்.அவ்வாறு கவலைகொள்ள தேவை இல்லை.குழந்தை பிறந்த சில மாதங்களுக்கு அதன் குடலில் உற்பத்தியாகும் பித்த நீர் சரியாக உணவுடன் கலக்காமல் மலத்துடன் வெளியேறுவதால் மலம் பச்சையாக இருக்கும்.குழந்தை வளர வளர அது சரியாகிவிடும்.மேலும் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் ஒரு நாளில் அதிகமாக மலம் கழித்தலோ அல்லது மூன்று நாளைக்கு ஒரு முறை மலம் கழித்தாலோ நார்மல் தான், அதற்கும் கவலைத் தேவை இல்லை.