பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபா மீது வெளிநாட்டு வாழ் பெண்கள் தற்போது புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கேளம்பாக்கம் அருகே, புதுப்பாக்கத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல் பள்ளியை நடத்தி வருபவர் சிவசங்கர் பாபா (73). இவர், பள்ளி மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகி, புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இவர், சிறுமியருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக, ‘போக்சோ’ வழக்கும் பாய்ந்துள்ளது. பெண் சிஷ்யை வீட்டில் பதுங்கியிருந்த போது சிவசங்கர் பாபாவை பொலிசார் பிடித்தனர்.
இவரை, சி.பி.சி.ஐ.டி., பொலிசார் காவலில் எடுத்து விசாரித்து வாக்குமூலம் பெற்றனர். சிவசங்கர் பாபா, மாணவியருக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பிய ஆபாச தகவல்கள் உள்ளிட்ட ஆதாரங்களை கைப்பற்றினர்.
இந்த நிலையில் வெளிநாடுகளில் வசிக்கும் முன்னாள் மாணவியர் உட்பட ஐந்து பேர், சிவசங்கர் பாபா மீது பாலியல் தொல்லை புகாரை தற்போது துணிச்சலுடன் அளித்துள்ளனர்.
இது குறித்து சி.பி.சி.ஐ.டி பொலிசார் தற்போது விசாரணை நடத்தி வரும் நிலையில் மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.