வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களங்களினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள விவசாய நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு கிழக்கு பிரதேசத்தில் நீர்வேளாண்மை பண்ணைகளை அமைப்பற்கு தேவையான காணிகள் தொடர்பாகவும் பிரஸ்தாபித்துள்ளார்.
வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் சி.பி. இரத்நாயக்காவுடனான சந்திப்பின் போதே கடற்றொழில் அமைச்சரினால் குறித்த விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
வனஜீவராசிகள் அமைச்சில் நேற்று(07) இடம்பெற்ற சந்திப்பின் போது, வடக்கு மாகாணத்தில் தற்போது வனத்துறையினரினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளில், யுத்தத்திற்கு முற்பட்ட காலப் பகுதியில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமையினை அமைச்சர் டக்ளஸ் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அமைச்சர் சி.பி. இரத்நாயக்கவிற்கு தெளிவுபடுத்தினார்.
அத்துடன், குறித்த காணிகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வடக்கு விவசாயிகள் ஆர்வமாக இருப்பதனையும் சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சம்மந்தப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்பட்டு விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் பட்சத்தில், அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்தினை விரைவுபடுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.
அதேபோன்று, வடக்கு கிழக்கு பிரதேசத்தில் ஏற்றுமதித் தரத்திலான நண்டு, இறால், மீன் வளர்ப்பு பண்ணைகளை உருவாக்கி நீர்வேளாண்மையை விருத்தி செய்வதன் மூலம் மேலதிக வருமானத்தை மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதுடன் அந்நியச் செலாவணியைப் பெற்றுக் கொள்வதற்கும் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகின்ற நிலையில், வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் நீர்வேளாண்மை பண்ணைகளை அமைப்பதற்கு பொருத்தமான இடங்களை விடுவித்து பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக குறித்த சந்திப்பின் போது கடற்றொழில் அமைச்சரினால் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் அமைச்சரின் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட அமைச்சர் சி.பி. இரத்நாயக்கா, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிகளுக்கு பூரணமான ஒத்துழைப்பினை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.