ஆஸ்திரியாவில் டாய்லெட் சென்ற நபரின் மர்ம உறுப்பை பாம்பு கடித்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தூக்கத்திலிருந்து விழித்து காலையில் டாய்லெட் சென்ற நபரை சுமார் 1.6 மீட்டர் அதாவது 5 1/4 -அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று கடித்த சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.
பாம்பு கடிக்கு உள்ளானவர் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் என்று குறிப்பிட்டுள்ளாது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
ஸ்டைரியா மாகாணத்தை (Styria province) சேர்ந்த போலீஸ் அதிகாரிகள், கிராஸ் நகரில் சம்பந்தப்பட்ட முதியவரின் அருகில் வசிக்கும் 24 வயது இளைஞர் ஒருவர் தன் வீட்டில் சில வகை விஷமில்லா பாம்புகளை வளர்த்து வருகிறார்.
இதில் அல்பினோ ரெட்டிகுலேட்டட் வகையை சேர்ந்த விஷத்தன்மையில்லா மலைப்பாம்பும் ஒன்று.
சமீபத்தில் இந்த 1.6 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பானது இருப்பிடத்திலிருந்து தப்பித்து வடிகால் வழியே பக்கத்து வீட்டு கழிப்பறை குழிக்குள் நுழைந்துள்ளது.
அந்த சமயத்தில் தான் இந்த 65 வயது முதியவர் சிறுநீர் கழிப்பதற்காக டாய்லெட்டில் அமர்ந்துள்ளார். அப்போது அவரது மர்ம உறுப்பை ஏதோ ஒன்று பலமாக கடித்ததை அடுத்து அலறி உள்ளார். பக்கத்து வீட்டிலிருந்து தப்பித்த அந்த மலைபாம்பு டாய்லெட் பேசினுக்குள் இருந்துள்ளது.
அதை கவனிக்காமல் முதியவர் சிறுநீர் கழிக்க முயன்ற போது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. அலறியபடி டாய்லெட் பேசினை பார்த்த முதியவர் அதில் மலைப்பாம்பு இருந்ததை கண்டு மேலும் அதிர்ந்துள்ளார். பின்னர் உடனடியாக அவசர சேவை பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் கழிப்பறை குழிக்குள் கிடந்த மலைப்பாம்பை பிடித்து, பின்னர் அதை சுத்தம் செய்து அந்த 24 வயதான இளைஞனிடம் ஒப்படைத்தனர். விஷ தன்மை இல்லை என்ற போதிலும் மர்ம உறுப்பை கடித்ததால் முதியவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை.
எனினும் இளைஞரின் அலட்சியத்தால் முதியவருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.