கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்ததாக பாவம் கணேசன் சீரியலில் நடிக்கும் நடிகை விலாசினி கூறியுள்ளார்.
நடிகை விலாசினி இசைஞானி இளையராஜாவின் நெருங்கிய உறவினர் ஆவார். இளையராஜா மனைவியின் சகோதரர் மகளான இவருக்கு சிறுவயது முதலே பாடகியாக வேண்டும் என விருப்பம் இருந்துள்ளது.
பின்னர் வி.ஜேவாக முயற்சி செய்த அவருக்கு அந்த வாய்ப்பு கைகூடவில்லை. இளையராஜா உள்ளிட்ட நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுகூடி காலியிடங்களை நிரப்பிட விலாசினிக்கு சபரி ஞானபிரகாசம் என்பவருடன் திருமணம் செய்து வைத்தனர்.
பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணம், கசப்பான முடிவை சந்தித்துள்ளது. தற்போது தன்னுடைய தொழில் மற்றும் திருமண வாழ்க்கை குறித்து பொதுவெளியில் வெளிப்படையாக பேசியுள்ள விலாசினியின் வீடியோ பலராலும் விரும்பி பார்க்கப்படுகிறது.
அதில், தான் கருப்பாக இருப்பதனால் வீடியோ ஜாக்கியாக மாற வேண்டும் என ஆசை நிறைவேறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
திருமண வாழ்க்கையை பொறுத்தவரை, தான் எதிர்பார்த்த கணவராக சபரி ஞானப் பிரகாசம் இல்லை எனக் குற்றம்சாட்டியுள்ள விலாசினி, தொடர்ந்து மன உளைச்சல்களை ஏற்படுத்தி வந்ததாக தெரிவித்துள்ளார்.
தனக்கு மட்டுமல்லாமல் தன்னை சார்ந்தவர்களுக்கும் கணவர் ஞானப் பிரகாசம் தொல்லை கொடுத்து வந்ததாகவும், மோசடி வேலைகளில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
திருமணத்துக்கு முன்பு இந்த விஷயங்கள் தனக்கு தெரியவில்லை எனக் கூறியுள்ள விலாசினி, மண வாழ்க்கைக்குப் பிறகு அனைத்து உண்மைகளும் தெரிய வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தன்னை சபரி ஞானப்பிரகாசம் அடித்து துன்புறுத்தியதாகவும், அது தனக்கு பிடிக்கவில்லை என அவர் கூறியுள்ளார். சாதாரண குடும்ப சண்டைகளைக் கடந்து சபரி ஞானப்பிரகாசத்துக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ள விலாசினி, அதனால் விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.
தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதால், அவரை விட்டு விலகியிருப்பது மட்டுமே தன்னுடைய வாழ்க்கைக்கு நல்லது எனக் கூறியுள்ளார். திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்து தற்போது தனியாக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், இந்த நிம்மதியுடன் தொடர்ந்து வாழ விரும்புவதாக விலாசினி தெரிவித்துள்ளார்.
விலாசினி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாவம் கணேசன் தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடர் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.