ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் ஜல்லிக்கட்டு தொடர்பாக யார் வழக்கு தொடர்ந்தாலும் தமிழக அரசின் கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக அலங்காநல்லூரில் ஆரம்பித்த போராட்டம் தமிழகம் முழுவதும் பரவியது. பல லட்சம் மாணவர்கள், இளையோரின் பங்குபற்றுதலுடன் சென்னை மெரீனா கடற்கரையில் தொடர் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கான தற்காலிகத் தடை நேற்று நீங்கியது. இதற்கான அவசர சட்டத்தை தமிழக (பொறுப்பு) ஆளுனர் வித்யாசாகர் ராவ் பிறப்பித்தார்.
இதேவேளை, ஜல்லிக்கட்டுகான தடையை நீக்கி தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை எதிர்த்து ‘பீட்டா’ அமைப்பு வழக்கு தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது.