ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்டில் வங்காளதேச வீரர்கள் மெஹிதி ஹசன் 5 விக்கெட்டும், ஷகிப் அல் ஹசன் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
வங்காளதேசம்-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் நடந்து வருகிறது.
முதலில் பேட் செய்த வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 468 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. லித்தன் தாஸ் 95 ரன்னிலும், கேப்டன் மொமினுல் 70 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.
சிறப்பாக ஆடி 5வது சதத்தை பதிவுசெய்த மக்முதுல்லா 150 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தஸ்கின் அகமது 75 ரன்னில் வெளியேறினார்.
ஜிம்பாப்வே சார்பில் முசாராபானி 4 விக்கெட்டும், டிரிபானோ, நியுவாச்சி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே அணி 2ம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், கைடனோ மற்றும் கேப்டன் பிரெண்டன் டெய்லர் பொறுப்புடன் ஆடினர். இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.
டெய்லர் 81 ரன்னிலும், கைடனோ 87 ரன்னிலும் அவுட்டாகினர். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. விக்கெட் கீப்பர் சகாப்வா 31 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.
இறுதியில், ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 276 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வங்காளதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 5 விக்கெட்டும், ஷகிப் அல் ஹசன் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 192 ரன்கள் முன்னிலை பெற்ற வங்காளதேசம் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் எடுத்துள்ளது.