ஒரு சில பயிற்சிகள் மற்றும் வாழ்வியல் நடைமுறைகளை பின்பற்றினால் உடலில் சேரும் கொழுப்பை குறைத்து கொடியிடை அழகை பெற முடியும். அவை என்னவென்று அறிந்துகொள்ளலாம்.வாழ்க்கை மற்றும் உணவு முறை மாற்றங்களால் பலரும் உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக வயிறு மற்றும் இடுப்பு பகுதிகளில் சேர்ந்த கொழுப்பை குறைப்பதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில உடற்பயிற்சிகள் மற்றும் வாழ்வியல் நடைமுறைகளை பின்பற்றினால் உடலில் சேரும் கொழுப்பை குறைத்து கொடியிடை அழகை பெற முடியும்.
உணவுமுறை
சிவப்பு அரிசி, கொண்டைக்கடலை, கோதுமை, சோளம், கம்பு, ராகி, பச்சை காய்கறிகள், பச்சை பட்டாணி, பழங்கள் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்
உறக்கம்
ஆரோக்கியமான உடலுக்கு உணவை போலவே உறக்கமும் அவசியமானது. தினமும் 7 முதல் 8 மணி நேரம் உறங்க வேண்டும். அதன் மூலம் மன அழுத்தம் ஏற்படாமல் உற்சாகத்தோடு இருக்க முடியும்.
உடற்பயிற்சி
அவரவர் உடலமைப்புக்கு ஏற்ற உடற்பயிற்சியை தினமும் செய்து வந்தால் உடலின் எடை படிப்படியாக குறையும்.
தரையில் ஒரு விரிப்பின் மீது மல்லார்ந்து படுத்துகொண்டு இடது காலை மடக்கி வலது பக்கமாக சாய்ந்து படுக்க வேண்டும். 10 விநாடிகள் கழித்து பழைய நிலைக்கு வந்து மடக்கிய காலை நீட்ட வேண்டும். பின்ன வலது காலை மடக்கி இதே பயிற்சியை செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு பக்கத்துக்கும் ஐந்து முறை பயிற்சி செய்வதால் இடுப்பு பகுதி கட்டுக்கோப்பாக இருக்கும். சாப்பிட்ட பிறகு இப்பயிற்சியை செய்யக்கூடாது.
ஜாக்கிங்
காலையில் ஜாக்கிங் எனப்படும் மெதுவாக ஓடும் பயிற்சியை செய்யலாம். தினமும் அரை மணி நேரம் ஜாக்கிங் செய்தால் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்பட்டுஉடல் எடை சுலபமாக குறையும். இதை மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகே மேற்கொள்ள வேண்டும்.
நடனம்
உள்ளத்துக்கு புத்துணர்வு தரும் நடன அசைவுகளை அவ்வப்போது செய்யலாம். ஆடத் தெரியாவிட்டாலும் இசைக்கேற்ப இடுப்பை வளைத்து கால், கைகளை மடக்கி சிறிய அசைவுகளையாவது செய்யலாம்.
மூச்சுப்பயிற்சி
நன்றாக மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடும் போது வயிற்று பகுதியிலுள்ள உறுப்புகள் நன்றாக இயங்கும். தசைகள் இறுக்கம் அடையும். இந்த பயிற்சிளை தொடர்ந்து செய்வதால் வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பு படிப்படியாக குறையும்.