செவ்வாய் கோளும் வெள்ளி கோளும் ஒன்றை ஒன்று நெருங்கி கைகுலுக்குவது போலவும் வானில் இணைவது போன்றும் தோன்றும் அரிய வானியல் நிகழ்வு இன்றும் நாளையும் வானில் தெரியும்.
இன்று( ஜூலை 12 ) மாலை சூரியன் மறைந்த பின்னர், 45 நிமிடங்கள் கழித்து மேற்கு வானில் இந்த அற்புதக் காட்சி தென்படும் என வல்லூநர்கள் கூறியுள்ளனர்.
ஜூலை 13 அன்று இந்த இரண்டு கோள்களுக்கும் இடையே வானில் வெறும் 0.5 டிகிரி இடைவெளிதான் இருக்கும்.
செவ்வாய், வெள்ளி கோள்களுக்கு சுமார் நான்கு டிகிரி தொலைவில் பிறை சந்திரன் தென்படும்.
அன்று மாலை மேற்கு வானில் தென்படும் இந்தக் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
இதுபோல் கோள்கள் ஒன்றை ஒன்று நெருங்கும் காட்சியைத் தொலைநோக்கி போன்று எந்தவிதக் கருவியும் இல்லாமல் நம்மால் வெறும் கண்களால் காண முடியும்.
இதில் எந்தவித ஆபத்தும் இல்லை எனவும் வல்லூநர்கள் கூறியுள்ளனர்.மேற்கு அடிவானம் தெளிவாகவும் மறைப்பு ஏதும் இல்லாமல் தெரியக்கூடிய ஒரு இடத்தில் இருந்த இந்த நிகழ்வை காணமுடியும்.
சூரியன் மறைந்த பின்னர் வானத்தைப் பார்த்தால் இரண்டு கோள்களும் அடுத்தடுத்த நாட்களில் ஒன்றை ஒன்று நெருங்குவது தெளிவாக இருக்கும்.
ஜூலை 13 வரை ஒன்றையொன்று நெருங்கி வரும் கோள்கள் அதன் பின்னர் ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செல்வதையும் கண்டு ரசிக்கலாம்.
இந்த அரிய வானியல் நிகழ்வை உங்கள் பகுதியில் நேரடியாகவோ அல்லது தொலைநோக்கி மூலமாகவோ கண்டு ரசிக்கலாம்.