யூரோ 2020 இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தின் தோல்வியைத் தொடர்ந்து, இனவெறி தாக்குதல்களை எதிர்கொண்டு வரும் வீரர் மார்கஸ் ராஷ்போர்ட் ஒரு உணர்ச்சிபூர்வமான கடிதத்தை வெளியிட்டுள்ளார்.
இறுதிப் போட்டியில் இத்தாலிக்கு எதிரான வெற்றியை தவறவிட்ட பிறகும், இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் தனக்கு ஆதரவு அளித்து வரும் பெரும்பான்மையான ரசிகர்களுக்கு மார்கஸ் ராஷ்போர்டு (Marcus Rashford) தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
ஆட்டத்தின் முடிவிலிருந்து தற்போது வரை அவர் அனுபவித்துவரும் வேதனையை விவரித்து ஒரு நீண்ட கடிதத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
“எங்கிருந்து தொடங்குவது என்று கூட எனக்குத் தெரியவில்லை, இந்த நேரத்தில் நான் எப்படி உணர்கிறேன் என்று வார்த்தைகளில் சரியாக எப்படி சொல்வது என்று கூட எனக்குத் தெரியவில்லை.
இந்த சீசன் எனக்கு கடினமானதாக இருந்தது, எல்லோருக்கும் இது தெளிவாகத் தெரியும் என்று நான் நினைக்கிறேன், நான் ஒரு உறுதி இல்லாமல் தான் அந்த இறுதிப் போட்டிக்குச் சென்றேன். நான் எப்போதுமே ஒரு பெனாலிட்டி ஷாட்டுக்காக காத்திருந்தேன், ஆனால் ஏதோ சரியாக படவில்லை. நான் முயற்சி செய்தேன், அனால் துரதிர்ஷ்டவசமாக விளைவு நான் விரும்பியதற்கு மாறாக நடந்தது.
நான் எனது அணியினரை வீழ்த்தியதைப் போல உணர்ந்தேன். அனைவரையும் வீழ்த்துவது போல் உணர்ந்தேன்.
அணிக்காக பங்களிக்கும்படி என்னிடம் கேட்கப்பட்டபோது, என் தூக்கத்தில் கூட நான் பெனாலிட்டி ஷாட்டை அடிப்பேன், இதில் முடியாதா? என நினைத்தேன். ஆனால், நான் பந்தை உதைத்ததிலிருந்து என் தலையில் மீண்டும் மீண்டும் எதோ ஓடுகிறது, அது எப்படி உணர்கிறது என்பதை விவரிக்க ஒரு வார்த்தை கூட இல்லை.
பைனல். 55 ஆண்டுகள். ஒரு பெனாலிட்டி. வரலாறு. இதற்கெல்லாம் சேர்ந்து நான் ஒரே ஒரு மன்னிப்பை கேட்பதா? என நினைத்தேன். நான் தொடர்ந்து மன்னிப்பு கேட்கவும், எனது அணியினரிடம் கத்தி அழ வேண்டும் என நினைத்தேன்.
இந்த கோடை நான் அனுபவித்த சிறந்த முகாம்களில் ஒன்றாகும், நீங்கள் அனைவரும் அதில் ஒரு பங்கைக் கொண்டிருந்தீர்கள். உடைக்க முடியாத ஒரு சகோதரத்துவம் கிடைத்துள்ளது. உங்கள் வெற்றி எனது வெற்றி. உங்கள் தோல்விகள் என்னுடையவை.
என் தோலின் நிறம், நான் வளர்ந்த இடம், என் விளையாட்டு என என்னைப் பற்றி என்ன எழுதப்பட்டாலும் அதைப் படிக்க வேண்டும் என்ற ஒரு விளையாட்டில் நான் பங்கு பெற்றுள்ளேன் என்று எனக்கு தெரியும்.
எனது செயல்திறனைப் பற்றி நான் நாள் முழுவதும் விமர்சிக்க முடியும், எனது ஆட்டம் போதுமானதாக இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனால், நான் யார், நான் எங்கிருந்து வந்தேன் என்பதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன்.
இந்த மூன்று சிங்கங்களையும் என் மார்பில் அணிந்துகொண்டு, ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தில் என் குடும்பத்தினர் என்னை உற்சாகப்படுத்துவதைக் காட்டிலும் வேறு எந்த தருணத்தையும் நான் உணரவில்லை. இது போன்ற நாட்களுக்காக நான் கனவு கண்டேன்.
இன்று நான் பெற்ற செய்திகள் நேர்மறையானவை, விடிங்டனில் கிடைத்த பதிலைக் கண்டு கண்ணீரின் விளிம்பில் இருக்கிறேன். என்னைச் சுற்றி எப்போதும் அரவணைக்கும் கைகளை கொண்டிருக்கும் சமூகங்கள் என்னை தொடர்ந்து நிலைநிறுத்துகின்றன.
நான் மார்கஸ் ராஷ்போர்டு, 23 வயது, தெற்கு மான்செஸ்டரின் விடிங்டன் மற்றும் வைதன்ஷேவைச் சேர்ந்த கருப்பு மனிதன். என்னிடம் வேறு எதுவும் இல்லை என்றாலும் இந்த அடையாளம் என்னிடம் உள்ளது.
எல்லா வகையான செய்திகளுக்கும் நன்றி. நான் மீண்டும் வலுவாக திரும்பி வருவேன். நாங்கள் மீண்டும் வலுவாக திரும்புவோம்” என்று எழுதியுள்ளார்.