தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும்.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்த தினமான இன்று, “கல்வி வளர்ச்சி தினமாக” கடைபிடிக்கப்படுகிறது.
காமராஜர் 1903ம் ஆண்டு ஜூலை 15ந் தேதி, விருதுநகரில் பிறந்தார். சுதந்திர போராட்ட வீரரும், சிறந்த பேச்சாளருமான சத்தியமூர்த்தியை, அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டவர். 1930ல் ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் உப்புச்சத்தியாகிரகம் நடைபெற்றபோது காமராஜரும் கலந்து கொண்டார். இதற்காக சிறைக்கும் சென்றார்.
பெருந்தலைவரின் வாழ்நாளில் அவருடைய பொதுத்தொண்டு காலம் 55 ஆண்டுகள். இதில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக 12 ஆண்டுகள். தமிழக முதல்-அமைச்சராக 9 ஆண்டுகள். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக 5 ஆண்டுகள். நாடாளுமன்ற உறுப்பினராக சுமார் 12 ஆண்டுகள். சட்டமன்ற உறுப்பினராக 16 ஆண்டுகள்.
தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும்.
அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை கீழ் பவானித் திட்டம், மேட்டூர் கால்வாய் திட்டம், காவிரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும்.
காமராஜர் மாற்றுக்கட்சி தலைவர்களும் பாராட்டும் தலைவராக விளங்கினார். காமராஜரையும், காங்கிரசையும் கடுமையாகத் தாக்கிய ஈ.வே.ரா. பெரியார், “பச்சைத் தமிழன்” என காமராஜரைப் பாராட்டினார்.
காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, கிங் மேக்கர், பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ்வர். இவர் “கருப்பு காந்தி” என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார்.