பார்சிலோனா கிளப்பின் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக மெஸ்சிக்கு வழங்கப்படும் ஊதியம் 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் லியோனல் மெஸ்சி. அர்ஜென்டினாவை சேர்ந்த அவர் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் அணிக்காக ஆடுகிறார்.
34 வயதான அவரது 21 ஆண்டுகால ஒப்பந்தம் சமீபத்தில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து மெஸ்சி எந்த அணிக்கும் சொந்தமில்லை என்றும் தனி வீரர் என்றும் அறிவிக்கப்பட்டது. அவர் நினைத்தால் எந்த கிளப்பில் வேண்டுமானாலும் விளையாடலாம் என்ற நிலை ஏற்பட்டது.
சமீபத்தில் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி கோபா அமெரிக்க கோப்பையை 28 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றியது. கிளப் அணிகளில் பல்வேறு கோப்பைகளை பெற்று கொடுத்த மெஸ்சி முதன் முறையாக தனது நாட்டுக்காக முக்கிய பட்டத்தை கைப்பற்றினார். இதன்மூலம் அவரது கனவு நனவானது.
இந்தநிலையில் மெஸ்சி பார்சிலோனா கிளப்பில் தொடர்ந்து விளையாடுகிறார். அவரது ஒப்பந்தம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. மெஸ்சியுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதை பார்சிலோனா கிளப் ஒப்புக்கொண்டுள்ளது.
அந்த கிளப் தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதன் காரணமாக மெஸ்சிக்கு வழங்கப்படும் ஊதியம் 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதை மெஸ்சி தரப்பு ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. ஒப்பந்த நீட்டிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.