உடல் நலத்திற்கு வலுசேர்க்கும் உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் பல்வேறு நோய்கள் தாக்காமல் தற்காத்துக்கொள்ளலாம். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி உடல் உறுப்புகளின் இயக்கத்தையும் மேம்படுத்தலாம்.
தேவையான பொருட்கள் :
சாம்பார் வெங்காயம் – 1 கையளவு
சிவப்பு குடைமிளகாய் – 2
மஞ்சள் குடைமிளகாய் – 2
பச்சை குடைமிளகாய் – 2
நல்லெண்ணெய் – 4 டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
நறுக்கிய இஞ்சி – 1 டீஸ்பூன்
நறுக்கிய பூண்டு- 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள்- அரை டீஸ்பூன்
இந்துப்பு – 1 டீஸ்பூன்
செய்முறை:
3 நிற குடைமிளகாய்களையும் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் அகன்ற பாத்திரத்தை சிறு தீயில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின்னர் சிறிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை கொட்டி தாளிக்கவும்.
பின்னர் குடைமிளகாய்களை கொட்டி அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் இஞ்சி, உப்பு சேர்த்து வேகவைத்து இறக்கி பரிமாறலாம்.
நன்கு மொறுமொறுவென்று இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அதிக தண்ணீர் சேர்த்து வேகவைத்தால் அதிலிருக்கும் புரத சத்து வீணாகிவிடும்.
ஆரோக்கிய பலன்: பச்சை குடைமிளகாயை காட்டிலும் சிவப்பு குடைமிளகாயில் பீட்டா கரோட்டின் 11 மடங்கு அதிகமாக உள்ளது. மேலும் வைட்டமின் சியும் ஒன்றரை மடங்கு அதிகம் இருக்கிறது. இரும்பு சத்தும் அதிகம் நிரம்பியிருக்கிறது. எனவே கண்களுக்கு மிகவும் நல்லது. நோய் எதிர்ப்பு திறனும் அதிகரிக்கும். சருமம், முடி, விரல் நகங்களுக்கும் அதிக வலிமையை கொடுக்கும்.
குறிப்பு: பெரிய வெங்காயத்தை காட்டிலும் சாம்பார் வெங்காயத்தில் புரதசத்து அதிகம் இருக்கிறது. அதனை பச்சையாகவோ அல்லது தயிர் பச்சடியாகவோ சாப்பிட்டுவந்தால் அதிக புரத சத்து உடலுக்கு கிடைக்கும். சின்ன வெங்காயத்தின் நுனி மற்றும் அடி பகுதிகளை லேசாக நறுக்கினாலே போதும். அதிகமாக நறுக்கி வீணாக்கினால் அதிலுள்ள புரத சத்துகள் குப்பைக்கு சென்றுவிடும்.