ஆடி மாதம் மக்களை இறைவழியில் அழைத்து செல்லும் மாதம். ஆடிப் பிறப்பிலிருந்து ஆடி இறுதி வரை ஆடியின் ஒவ்வொரு நாளும் தெய்வீகச் சடங்குகள் அனுசரிக்கப்படுகின்றன.
ஆடி மாதம் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் களை கட்டும்.
ஆடி தெய்வங்களுக்கான மாதமாகக் கருதப்படுகிறது. ஆடிப் பிறப்பிலிருந்து ஆடி இறுதி வரை ஆடியின் ஒவ்வொரு நாளும் தெய்வீகச் சடங்குகள் அனுசரிக்கப்படுகின்றன. சாஸ்திரங்கள் இதை சக்தி வழிபாட்டுக்கான மாதம் என்கின்றன. ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கான கொடைத் திருவிழாக்கள் கொடியேற்றத்துடன் தொடங்குகின்றன.
ஆடியில் சூரியன் மனோகாரகன் சந்திரனின் வீட்டில் அமர்ந்திருக்கிறார். சூரியனின் தென் திசை பயணம் தொடங்குகிறது.
ஆடியை ‘கர்கடக மாதம்’ என்றழைக்கின்றனர். குருவின் நட்சத்திரமான புனர்பூசம் 4ம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி பிரவேசம்.
ஆடி மாதம் ஒன்றில் தான் பார்வதி தேவி. மலைரசன் மகளாக பிறந்தால் என்கிறது தேவி பாகவதம். மதுரை மீனாட்சி அம்மை அவதரித்தது ஆடி மாதத்தில் தான். ஆடி மாதம் கிராம தேவதைகளுக்கான மாதம். ஆடி மாதம் கொடைத் திருவிழாவில் அம்மனைக் குளிர்வித்தால்தான் கிராமம் செழிக்கும் என்னும் நம்பிக்கையால் கிராமத் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. சென்னை மாநகரத்திலும் ஆடி மாதம் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தெருவிற்கு தெரு அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபடுகின்றனர்.
இந்த மாதத்தில் வேம்பும், எலுமிச்சையும் கொண்டு வழிபடுவது மிகவும் சிறப்பு. ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? பக்திபூர்வமான இந்த செயல்களுக்கு அறிவியல் ரீதியான காரணமும் இருக்கிறது. ஆடி மாதம் மழைக்காலத்தின் ஆரம்பம். தொற்று நோய்கள் பல இந்த கால கட்டத்தில் பரவும். வேம்பும், எலுமிச்சையும் இயற்கையாகவே சிறந்த கிருமி நாசினி. பலர் கூடும் கோயில் திருவிழாக்களில் அம்மனுக்கு படைக்கப்பட்டு பிரசாதகமாக இவை தரப்படுவதால் நோய்கள் பரவாமல் தடுக்கப்படுகிறது. வெப்பம் குறைவான இந்த நாட்களில் எளிதில் செரிக்க கூடிய உணவான கூழ் படைக்கப்பட்டு, பிரசாதமாக அளிக்கப்படுகிறது. அதனால் தான் ஆடிக்கூழ் அமிர்தமாகும் என்று சொல்லப்படுகிறது.
உத்ராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தஷ்ணாயண காலத்தில் சூரியனின் ஒளிக் கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும். ஆடி மாதத்தில் பகல் பொழுது குறைவாகவும், இரவு நேரம் நீண்டும் காணப்படும். காற்றும் மழையும் அதிகமாக இருக்கும். ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்று பழமொழியே உண்டு. ஆடியில் விதை விதைத்தல், விவசாயம் செய்தல், துணி நெய்தல், குடிசைத் தொழில் செய்தல், போன்ற வருமானத்திற்கு வழி ஏற்படுத்திக் கொள்ளும் முக்கியமான ஆதார வேலைகளில் ஈடுபடுவார்கள். ஆடி மாதம் விவசாயத்திற்காக செலவு செய்யும் காலமாக இருந்ததால் அந்தச் சமயத்தில் வேறு செலவுகள் செய்யப் பணம் இருக்காது.
திருமணம், புதுமனைபுகுவிழா போன்ற சுபகாரியங்கள் செய்ய ஆடி ஏற்ற மாதமல்ல அது பீடை மாதம் என கூறப்படுவது உண்டு. ஆடி மாதம் மக்களை இறைவழியில் அழைத்து செல்லும் மாதம். பீடு நிறைந்த மாதம். மக்கள் மனபீடத்தில் இறைவனை நிலைநிறுத்துகிற மாதம். அதனால் தெய்வ சிந்தனையில் இருப்பதால் வீட்டு சுப நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை. ஆடிமாதத்தில் திருமணம் நடைபெற்றால் 10 மாதம் கழித்து சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும் போது வெப்பம் அதிகமாக இருக்கும். அந்த மாதத்தில் குழந்தை பிறந்தால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்பதனால்தான் ஆடிமாதத்தில் திருமணம் செய்வதையும், கணவன்-மனைவி கூடுவதையும் பெற்றோர்கள் தவிர்த்தனர்.
அதுமட்டுமல்லாது ஆடிமாதத்தில் தெற்கு திசையில் பூமி நகரும் போது விஞ்ஞான ரீதியாக நில அதிர்வுகளும், கடல்சீற்றமும் ஏற்படும். அதிக காற்றுவீசும். பலத்த மழை பெய்யும். அதனால் மனையடி கோலம், கிரக பிரவேசம் போன்றவற்றை செய்வதில்லை.