தனது 6 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை அனுமதி பெறாமல் ஓட்டலாக மாற்றியதாக குற்றம் சாட்டி மும்பை மாநகராட்சி, நடிகர் சோனு சூட்டிற்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.
தமிழில் ஒஸ்தி படத்தில் வில்லனாக நடித்தவர் சோனுசூட். கள்ளழகர், மஜ்னு, ராஜா, கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்தியில் அதிக படங்களில் நடித்துள்ளார்.
சோனுசூட் கொரோனா ஊரடங்கில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிகள் செய்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றார். இந்த நிலையில் மும்பை ஜூகு பகுதியில் உள்ள தனது 6 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை அனுமதி பெறாமல் ஓட்டலாக மாற்றியதாக குற்றம் சாட்டி மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்து சோனுசூட் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடியானது. இதனால் மும்பை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். அந்த மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். இந்த நிலையில் மும்பை மாநகராட்சி, ஓட்டலாக மாற்றிய கட்டிடத்தை 2 வாரங்களுக்குள் அடுக்குமாடி குடியிருப்பாக மாற்ற வேண்டும் என்று கெடுவிதித்து சோனு சூட்டுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.