தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, விரைவில் வெப் தொடரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதில் பிரபாஸ், சத்யராஜ், நாசர், தமன்னா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து இருந்தனர்.
இந்த நிலையில் பாகுபலி 3-ம் பாகம் வெப் தொடராக தயாராக உள்ளது. பாகுபலி படத்தில் வரும் ராஜமாதா சிவகாமிதேவி கதாபாத்திரத்தின் இளம் வயது வாழ்க்கையை மையமாக வைத்து இந்த தொடர் தயாராக உள்ளது என்றும், பாகுபலி முதல் பாகத்துக்கு முன்பு நடந்த சம்பவங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த தொடரில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. அந்த வகையில், இத்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கதை பிடித்துள்ளதால் நயன்தாரா நடிக்க சம்மதிப்பார் என்று படக்குழுவினர் நம்புகின்றனர்.
படப்பிடிப்பை செப்டம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர். இந்த தொடர் அடுத்த வருடம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. காஜல் அகர்வால், சமந்தா, தமன்னா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் ஏற்கனவே வெப் தொடர்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.