நீர் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதன்மூலம் மலேரியா, டெங்கு காய்ச்சல் வரும். எளிமையான மூலிகைகளை பயன்படுத்தி கொசுக்களை விரட்டலாம். கொசுக்களை அழிப்பதில் முதன்மையாக இருப்பது பேய் மிரட்டி இலை. இதை கொசு விரட்டியாக பயன்படுத்தலாம். குன்றுகளுக்கு கீழ் கிடைக்கும் செடி. நாட்டு மருந்து கடைகளில் பேய் மிரட்டி திரி என்ற பெயரில் கிடைக்கும்.
பேய் மிரட்டி இலையில் விளக்கெண்ணெய் தடவி திரியாக திரித்து விளக்கேற்றி வைத்தால் அதில் இருந்து வரும் புகை கொசுவை விரட்டும். இலைகள் எரியும் தன்மை கொண்டது. மலேரியா, டைபாய்டு, யானைக்கால் வியாதி ஆகியவற்றுக்கு காரணமான கொசுக்களை விரட்ட கூடியது. வேப்பிலை, நொச்சி ஆகியவற்றை கொசுக்களை விரட்ட பயன்படுத்தலாம்.
பேய் மிரட்டி இலைகளை பயன்படுத்தி காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். 4 இலையுடன் சிறிது மிளகுப்பொடி, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்க வேண்டும். பின்னர், வடிகட்டி தேன் சேர்த்து குடித்தால், நோய் எதிர்ப்பு சக்தி கூடும். காய்ச்சல் தணியும். உடல் வலிக்கு மருந்தாகிறது. பேய் மிரட்டி இலை, துளசி வகையை சேர்ந்தது. துளசியை போன்று நறுமணத்தை உடையது. சாலை ஓரங்களில் கிடைக்கும். ஊதா நிறத்தில் தும்பை பூ போன்ற உருவம் கொண்டது.
துளசியை போன்று கொத்தான மலர்களை கொண்டது. இதற்கு மலை துளசி என்ற பெயரும் உண்டு.அருகம்புல் வேரை பயன்படுத்தி காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். ஒருபிடி அருகம்புல் வேரில், ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிக்கட்டி பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்க்கவும். காய்ச்சல் இருக்கும்போது தினமும் இருவேளை 50 முதல் 100 மில்லி எடுத்து கொண்டால் காய்ச்சல் குணமாகும்..
கொய்யா இலைகளை பயன்படுத்தி டெங்கு காய்ச்சலை தடுக்கும் மருந்து தயாரிக்கலாம். துளிராக இருக்கும் கொய்யா இலைகள் 3 எடுத்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கவும். இது டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பு மருந்தாகிறது. காய்ச்சல் உள்ளவர்கள் கொய்யா இலை தேனீர் குடித்துவர விரைவில் குணமாகும்.
கொய்யா இலைகள் நோய் எதிர்ப்பு சக்தி உடையது. டெங்கு காய்ச்சலை குணமாக்கும். டெங்கு வந்தால் அதிகமான குளிர், உடல் வலி இருக்கும். அப்போதுஇந்த தேனீரை குடித்தால் நன்மை ஏற்படும். இது முதல் தரமான மருத்துவ சிகிச்சை. காய்ச்சல் தணியும் வரை தேனீர் தயாரித்து குடிக்கலாம். எல்லா விதமான காய்ச்சலும் குணமாகும். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் கடை சரக்குகளில் இருந்து காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கோரைக் கிழங்கு, சுக்கு, இந்துப்பு, கடுக்காய், கறிவேப்பிலை, தேன்.
அரை கிராம் இந்துப்பை தூள் செய்து எடுத்துக் கொள்ளவும். சிறிது சுத்தப்படுத்திய கோரைக் கிழங்கு, கறிவேப்பிலை, சிறிது சுக்குப்பொடி, கடுக்காய் பொடி சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். பின்னர், வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து குடிக்கவும். இது விஷ காய்ச்சல், கடுமையான உடல் வலியை குணமாக்கும். கண்கள் சிவந்து போவது, சளி பிரச்னையை சரிசெய்கிறது.