நடிகர் விஜய்யின் மேல்முறையீடு மனு விரைவில் நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, ரூ.1 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. நடிகர்கள் நிஜத்திலும் ஹீரோவாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரையும் வழங்கியது. இதையடுத்து சமூக வலைத்தளத்தில் விஜய்க்கு ஆதரவாகவும், எதிராகவும் ஹேஷ்டேக் டிரெண்டாகி பரபரப்பானது.
இதனிடையே தன்னை பற்றி தீர்ப்பில் பதிவு செய்த விமர்சனங்களை நீக்கக் கோரியும், அபராதத்தை ரத்து செய்யக்கோரியும் நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் விஜய்யின் வழக்கை, வரி தொடர்பான மேல் முறையீடுகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றுமாறு பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் நடிகர் விஜய்யின் மேல்முறையீடு மனு விரைவில் நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.