முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும்போது நாம் சரியான இலக்கை நோக்கித்தான் பயணிக்கிறோமா என்று யோசித்து செயல்பட வேண்டும். அப்படி தேர்ந்தெடுக்கும் சரியான பாதைதான் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும்.
வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது அதற்கு தீர்வு காண்பதற்கு இரு வழிகள் புலப்படும். ‘மதில் மேல் ஏறிய பூனை போல’ அந்த பக்கம் செல்லவா? இந்த பக்கம் செல்லவா? என்ற தடுமாற்றம் மனதில் குடிகொள்ளும். எந்த வழியில் என்னென்ன நிகழும், எடுக்கும் முடிவுகள் சாதகமாக அமையுமா? என்ற குழப்பம் உண்டாகும். ஏதாவதொரு முடிவு எடுத்துத்தான் ஆக வேண்டும். அப்போது நிதானமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். இறுதியில் ஒரு முடிவை எடுத்துவிட்டு அதன் பிறகு மனதை போட்டு குழப்பக்கூடாது. எடுத்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும்.
நிறைய சந்தர்ப்பங்கள் நம்மை கடந்து போகும். அதை நாம் முறையாக பயன்படுத்திக்கொள்வதற்கு தவறிவிடுவோம். பிறகு யோசித்து வருத்தப்படுவோம். ஆதலால் முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும்போது நாம் சரியான இலக்கை நோக்கித்தான் பயணிக்கிறோமா என்று யோசித்து செயல்பட வேண்டும். அப்படி தேர்ந்தெடுக்கும் சரியான பாதைதான் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும்.
திருமணம், தொழில் என்று பல இலக்குகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனை திறம்பட கையாள்வதற்கு தனித்திறமை கொண்டிருக்க வேண்டும். நன்கு யோசித்து முடிவெடுத்துவிட்டு செயல்படவும் தொடங்கிய பிறகு, எடுத்த முடிவை பாதியில் மாற்றுவதற்கு முயற்சிக்கக் கூடாது. நாம் எந்த வழியை தேர்வு செய்கிறோமோ அந்த வழியில் நேர்மையாக பயணிக்க வேண்டும். நன்மை, தீமை என்பது எல்லா வழியிலும் உண்டு. எந்த ஒரு விஷயத்திலும் நன்மைகளை மட்டுமே எடை போடக்கூடாது. தீமைகளை கடந்து செல்லவும் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு இலக்கை நிர்ணயித்த பின்பு, அதில் இருந்து பின் வாங்கக்கூடாது. அப்படி செய்தால் அதுநாள் வரை உழைத்த உழைப்பு வீணாகிப்போய்விடும். மற்றவர்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும், மதிப்பும், மரியாதையும் கேள்விக்குறியாகிவிடும்.
இன்றைய சூழலில் இளைஞர்கள் சரியான முடிவை எடுக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். இது அவர்கள் வாழ்க்கையை திசை மாற்றி விடுகிறது. மன அழுத்தம், கோபம், டென்ஷன் இவையெல்லாம் ஒன்று சேர்ந்து சரியான முடிவு எடுக்க விடாமல் தடுத்து விடுகிறது. முடிவு எடுக்கும் வேகத்தை வைத்துத்தான் ஒருவரின் தனித்திறமையையும், மூளையின் செயல்பாட்டையும் கண்டறிய முடியும். சரியான முடிவெடுக்க மூளை, மன நிலையை தெளிவாக வைத்திருக்க வேண்டியது அவசியம். எந்த முடிவாக இருந்தாலும் அதனை திடமான நம்பிக்கையுடன் எடுக்க வேண்டும். அந்த நம்பிக்கைக்கு உயிர் கொடுத்து செயல்படும்போது நாம் தேர்வு செய்த வழி நம்மை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும்.
கல்வியை தேர்ந்தெடுக்கும்போது நம் அறிவின் பலத்தை மனதில் கொண்டு தேர்வு செய்ய வேண்டும். இதுநாள் வரை நாம் சாதித்த விஷயங்கள், புரிந்து கொள்ளும் விதம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு முடிவெடுத்தால் கற்றல் எளிமையானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். நாம் ஒரு பொருளை தூக்கும்போது உடலின் பலத்தை பொறுத்துத்தான் சுமையை தீர்மானிக்கிறோம். அதுபோலத்தான், நாம் மட்டுமே சுமக்க வேண்டிய சுமை என்பதால் நம்முடைய பலம் நமக்கு தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.
ஒரு தொழிலை தேர்வு செய்யும்போது வருமானத்தை மையமாக வைத்து தேர்வு செய்யாமல் தொழில் திறமை, ஆர்வம் இதையெல்லாம் முன் நிறுத்தி முடிவு செய்ய வேண்டும். செய்யும் தொழிலில் ஆர்வத்துடன் ஈடுபடுவது, வேலை பளுவை குறைக்கும். நுணுக்கமான விஷயங்களை ஈடுபாட்டோடு கற்றுக்கொள்ள தூண்டும். இதுபோன்ற விஷயங்கள் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும். எந்த வேலை நம் திறமைக்கு ஏற்றது என்பதை மனதில் கொண்டு தான் தேர்வு செய்ய வேண்டும். வருமானம் ஒன்று மட்டுமே வாழ்க்கையை வளப்படுத்தாது. அதற்கும் மேல் பல விஷயங்கள் உள்ளன. வாழ்க்கையில் முக்கியமான காலகட்டங்களில் எதை தேர்வு செய்வது என்று புரியாமல் சிந்தனையில் ஆழ்ந்து விடுவோம். நம் அறிவு மட்டுமே நமக்கு ஆசான். நமக்கு எது சாதகமாக இருக்கும் என்பது நமக்குத்தான் தெரியும். நமக்கு எது சவு கரியமானது என்பதும் நம் அறிவுக்கு புலப்படும்.
வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் போதும் நிறைய சிந்திக்க வேண்டியிருக்கும். ஒரு சில விஷயங்களில் நாம் விட்டுக்கொடுத்து போக வேண்டியிருக்கும். எதை எதை விட்டுக்கொடுக்க முடியும் என்பதை தீர்மானித்துக்கொள்ள வேண்டும். பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை இல்லை. அதை புரிந்து கொண்டால் குழப்பம் வராது. ஏதேனும் ஒரு பிரச்சினை வந்தாலும் கூட, ‘நாம் தவறு செய்துவிட்டோமோ. சரியான வழியை தேர்வு செய்யவில்லையோ என்று ஆதங்கப்படக்கூடாது. எல்லோருடைய வாழ்விலும் ஏதேனும் ஒரு காலகட்டத்தில் தடுமாற்றம் தோன்றும். அப்போது நாம் கொஞ்சம் நிதானித்து, சரியான பாதையை தேர்வு செய்து கொள்ள வேண்டும். எந்த நிலையிலும் தேர்வு செய்த பிறகு குழப்பம் கொள்ளக்கூடாது. ‘எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு’ என்ற திருவள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப செய்யத்தகுத்த செயலை நன்கு சிந்தித்த பிறகே துணிந்து தொடங்க வேண்டும். தொடங்கிய பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்பது குற்றமாகும்.