குழந்தைப் பேறு, பெற்றோருக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், கூடுதல் கடமைகளையும் கொடுக்கிறது. அதனால் தூக்கத்தை மறந்து, குழந்தைகளை கவனிக்கவேண்டி உள்ளது.
குழந்தை பிறப்பது தாய்க்கு எவ்வளவு சந்தோஷத்தை கொடுக்கிறதோ அதே அளவிற்கு அன்பு தொல்லையாகவும் மாறிவிடுகிறது. இரவில் கண்விழித்து குழந்தையை பராமரிப்பது, அழும் குழந்தையை அமைதிப்படுத்தி தூங்கவைப்பது, நேரம் பார்க்காமல் பசியாற்றுவது என குழந்தைகளை கண்ணும் கருத்துமாக கவனிப்பதால், தாயின் ஓய்வு நேரம் குறைந்துவிடும். குறிப்பாக முதல் குழந்தையை பெற்ற பெண்களுக்கு நிம்மதியான தூக்கம் என்பது கேள்விக்குறியாக மாறிவிடும். இதுதொடர்பாக, இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில், பல உண்மைகள் தெரியவந்துள்ளன.
கர்ப்ப காலத்தில் நிம்மதியாக ஓய்வெடுக்கும் பெண்கள், குழந்தை பிறந்ததும் பரபரப்பாக மாறிவிடுகிறார்களாம். குறிப்பாக முதல் குழந்தையை பெற்றெடுக்கும் பெண்களுக்கு, குழந்தை பிறந்ததில் இருந்து அடுத்த 6 ஆண்டுகளுக்கு, நிம்மதியான தூக்கம் என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது. குழந்தை பிறந்த முதல் மூன்று மாதங்களிலேயே, பெண்கள் ஒருமணிநேர தூக்கத்தையும், தந்தை 15 நிமிட தூக்கத்தையும் இழந்துவிடுகிறார்கள். கிடைக்கும் ஓய்வுநேரங்களிலும், தாயால் நிம்மதியாக தூங்கமுடிவதில்லை. இதுதொடர்பாக இங்கிலாந்தில் உள்ள வார்விக் பல்கலைக்கழகத்தின் உளவியல்துறையை சேர்ந்தவர்கள் 4,659 பெற்றோர்களிடம் 7 ஆண்டுகள் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள்.
‘‘குழந்தைப் பேறு, பெற்றோருக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், கூடுதல் கடமைகளையும் கொடுக்கிறது. அதனால் தூக்கத்தை மறந்து, குழந்தைகளை கவனிக்கவேண்டி உள்ளது. இந்த விஷயத்தில் ஆண்களை விட, பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். ஏனெனில் குழந்தை பராமரிப்பில் பெண்களின் பங்கு அதிகமாக இருப்பதால், அவர்களின் தூக்கம் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக நிம்மதியான தூக்கம் கிடைப்பதில்லை’’ என்கிறார், உளவியல் ஆராய்ச்சியாளர் சகாரி லிமோலா.
தாய்மார்களின் தூக்கத்திற்கும், அவர்கள் சாப்பிடும் உணவிற்கும் தொடர்பு இருக்கிறது. அதனால் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். காரமான மற்றும் வறுத்த உணவுகளை சாப்பிடக்கூடாது. வெளி உணவுகளையும் தவிர்க்க வேண்டும். வீட்டில் சமைத்து சாப்பிடுவதே உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. தினமும் தவறாமல் ஒரு டம்ளர் பால் பருக வேண்டும். தூக்கத்தை தூண்டும் ஆற்றல் பாலுக்கு இருக்கிறது. அதிலிருக்கும் செரோடோனின் ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகை செய்யும்.