40 வயதுகளில் சரியான சரும பராமரிப்பு பொருட்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் ஏற்படும் முதுமையை தள்ளிப்போடலாம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:
40 வயதுகளில் சருமம் அதன் மென்மை தன்மையை இழக்கத் தொடங்கும். அப்போது சருமத்தில் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் எட்டிப்பார்க்கும். அது முதுமைக்கான அறிகுறிகளாகும். வயது அதிகரிக்கும்போது ரத்த நாளங்கள் பாதிப்புக்குள்ளாகும். சூரியனில் உள்ள புற ஊதாக்கதிர்களும் சருமத்தில் உள்ள எலாஸ்டின் எனப்படும் இழைகளை பாதித்து சரும வெடிப்புக்கு வித்திடும். சரியான சரும பராமரிப்பு பொருட்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் ஏற்படும் முதுமையை தள்ளிப்போடலாம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:
வைட்டமின் ஏ பற்றாக்குறை: வயது அதிகரிக்கும்போது சருமம் கொலோஜனை இழக்கத் தொடங்கும். அதுதான் சருமத்தை மென்மையாக வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. அத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வைட்டமின் ஏ பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் ரெட்டினால் எனும் மருந்து பொருளை உபயோகிக்கலாம்.
சன்ஸ்கிரீன்: யூ.வி.ஏ, யூ.வி.பி கதிர்வீச்சுக்களுக்கு எதிராக செயல்பட்டு சருமத்தை பாதுகாக்கும் தன்மை சன்ஸ்கிரீனுக்கு உண்டு. சன்ஸ்கிரீன் தேர்விலும் கவனம் வேண்டும். ஆல்கஹால் கொண்ட ஸ்பிரேக்கள், ஜெல்களை தவிர்ப்பது நல்லது. சருமத்தில் உள்ள கொலோஜனை பாதுகாப்பதற்கு சன்ஸ்கிரீன் உபயோகப்படுத்துவது அவசியமானது.
இறந்த செல்கள்: சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு சில நாட்களுக்கு பிறகு புதிய சரும அடுக்குகள் உருவாகும். இது வழக்கமான நடைமுறையாகும். ஆனால் வயது அதிகரிக்கும்போது இந்த செயல்முறை மெதுவாக நடக்கும். அதனால் சருமம் பொலிவின்றி காட்சியளிக்கும். சருமத்தில் கரடுமுரடான திட்டுகள் உருவாகக்கூடும். வாரம் ஒருமுறையாவது இறந்த செல்களை நீக்குவது சருமத்திற்கு நலம் சேர்க்கும்.
முகம் கழுவுதல்: வயது அதிகமாகும்போது சருமத்தில் எண்ணெய் பசைத் தன்மைகுறையும். சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்வதற்கு குறிப்பிட்ட இடை வெளியில் முகம் கழுவும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். அது செல்களை தாக்கும் கிருமிகளை எதிர்த்து போராட உதவும். சருமத்திற்கு அழுத்தம் கொடுக்காமல் மென்மையாக முகம் கழுவுவது நல்லது. அதன் மூலம் முகப்பரு பிரச்சினையையும் தவிர்க்க முடியும்.
மசாஜ்: முகத்தில் உள்ள தசைகளை இலகுவாக்குவதற்கு மசாஜ் செய்ய வேண்டும். கை விரல்களை கொண்டு மென்மையாக தசைகளை அழுத்தி வட்ட வடிவத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இது திசுக்களின் சிதைவை தடுக்கவும் உதவும்.
தண்ணீர்: தினமும் குறைந்தது 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் பருகுவது சரும ஆரோக்கியத்திற்கு வித்திடும். சருமம் ஜொலிப்பதற்கு ஈரப்பதமும், நீர்ச்சத்தும் தேவை.
எண்ணெய்: இளம் வயதில் இருந்தே ஒமேகா கலந்த எண்ணெய்யை உபயோகிக்கலாம். அது சருமத்திற்கு நலம் சேர்க்கக்கூடியது. மிகவும் நுட்பமாக சருமத்தை பாதுகாக்கக்கூடியது.
ஒப்பனை: கூடுமானவரை ரசாயனங்கள் கலந்த மேக்கப் பொருட்களை பயன்படுத்தவேண்டாம். ஒப்பனையோடு தூங்குவதும் சருமத்திற்கு நல்லதல்ல. வயதாகும்போது சரும துளைகளில் எளிதாக அடைப்பு உருவாகிவிடும். நுரைகளை வெளிப்படுத்தும் கிரீம்கள், ஜெல்களை கொண்டு முகத்தை கழுவுவது சிறந்தது.
முக கிரீம்: வயதாகும்போது எண்ணெய் சுரப்பிகளின் செயல்திறன் குறையும். அதனால் சருமத்தில் கோடுகள், சுருக்கங்கள் தென்படும். சாதாரண கிரீம்களுக்கு பதிலாக பேஸ் கிரீம் உபயோகிப்பது சருமத்தை மிருதுவாக்க உதவும்.
சர்க்கரை: உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதும் சரும ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். அடர் பெர்ரி பழங்கள், அவகொடா, பச்சை இலை காய்கறிகளின் ஜூஸ்கள் போன்றவற்றில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் சரும செல்கள் வயதாகும் தன்மையை குறைக்கக்கூடியவை. அவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.