இந்திய கடலோர காவல்படையின் 40-வது ஆண்டு விழாவையொட்டி தென்பிராந்தியம் சார்பில் வங்க கடலில் சாகச நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. இதற்காக சென்னையில் இருந்து 8 ரோந்து கப்பல்களில் 2 ஆயிரம் பேர் நடுக்கடலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதனையடுத்து கடலில் 22 நாட்டிக்கல் மைல் தூரத்தில் சாகச நிகழ்ச்சிகள் நடந்தது. இதனை தென்பிராந்திய கடலோர காவல் படை ஐ.ஜி. ராஜன் பர்க்கோத்ரா மற்றும் கடலோர காவல் படை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
இதில், பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் ஹெலிகாப்டரை வேகமாக செலுத்தி வீரர்கள் சாகசம் நிகழ்த்தினர். பயங்கரவாதிகள் செயல்பாட்டை கண்காணிக்கும் வகையில் 2 டோர்னியர் ரக விமானங்களில் வீரர்கள் கண்காணிப்பு ஒத்திகை செய்து காட்டினர்.
கடலில் விழுந்த வீரர் நெருப்பை எரியவிட்டு இடத்தை காண்பித்தவுடன், ஹெலிகாப்டரில் வந்து அவரை காப்பாற்றும் சாகசம் செய்து காண்பிக்கப்பட்டது. நடுக்கடலில் மிதக்கவிடப்பட்ட பெட்டியை நோக்கி ஐ.சி.சி. சமுத்திரா பஹரேதார் போர்க்கப்பலின் மேல்தளத்தில் இருந்தபடி நவீனரக துப்பாக்கி மூலம் வீரர்கள் சுட்டனர், அதனைத் தொடர்ந்து கப்பலில் பிடித்த தீயை அணைக்கும் ஒத்திகை நிகழ்ச்சியும் நடந்தது.
அதன்பின்னர் போர்க்கப்பல்கள் மற்றும் டோர்னியர் ரக விமானங்கள், ஹெலிகாப்டர்களின் அணிவகுப்பு நடந்தது.
இதுகுறித்து தென்பிராந்திய ஐ.ஜி. ராஜன் பர்க்கோத்ரா நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய கடலோர காவல்படை கடந்த 1978-ம் ஆண்டு 7 கப்பல்களுடன் பாதுகாப்பு பணியை தொடங்கியது. ஆனால் தற்போது 128 அலுவலகங்களில் இருந்தபடி, 62 விமானங்களை பாதுகாப்பு பணிக்கு இயக்கி ஒரு வலிமைமிக்க பாதுகாப்பு அமைப்பாக மாறி உள்ளது. தற்போது 1,693 அதிகாரிகளும், 9 ஆயிரத்து 617 பதிவு செய்யப்பட்ட பணியாளர்களும், 1,279 வீரர்களும் பணியாற்றி வருகின்றனர்.
உலக அளவில் இந்திய கடலோர காவல் படை 4-வது இடத்தில் உள்ளது. இதனை 2020-ம் ஆண்டுக்குள் 3-வது இடத்துக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக 200 கப்பல்கள், 100 விமானங்கள், 36 ஹெலிகாப்டர்கள் கடலோர காவல்படையில் இணைக்கப்பட உள்ளது.
இந்திய கடல் பகுதிகளை பாதுகாப்பதுடன், கடல் வழிகளில் கட்டுப்பாடுகளையும் பின்பற்றுவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறோம். ‘நம் பாதுகாப்பு’ என்பதே இந்த ஆண்டுக்கான எங்களுடைய தாரக மந்திரம் ஆகும்.
மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது ஜீ.பி.எஸ். கருவி, கையடக்க ரேடியோ உள்ளிட்ட சாதனங்களை கொண்டு செல்ல வேண்டும். தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு உட்பட்ட கடலோர பகுதிகளில் கடந்த ஆண்டு 130 சம்பவங்கள் மூலம் 86 பேர் காப்பாற்றப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.