தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தங்கியிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவரும், அவர்களை ஏற்றி வந்த அல்லைப்பிட்டியை சேர்ந்த இருவருமே கைதாகினர்.
யாழ் வைத்தியசாலை வீதியை சேர்ந்த ஒருவரும், அரியாலையை சேர்ந்த ஒருவருமே இந்தியாவிலிருந்து திரும்பினர். அவர்கள் இந்திய மீனவர்களின் படகில் வந்து, பின்னர் அல்லைப்பிட்டி மீனவர்களின் படகில் கரையை அடைந்துள்ளனர்.
4 பேரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து இந்திய ஊடகங்கள் தரப்பில் வெளியான செய்தியில்,
சமீபகாலமாக இலங்கையைச் சேர்ந்த மக்கள் சட்டவிரோதமாக தமிழகம் வந்து தமிழகத்தில் இருந்து கனடா செல்வதற்காக முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஹமில்டன் என்பவர் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி சட்டவிரோதமாக தமிழகம் வந்து பின் பெங்களூரில் இருந்து விமானம் மூலமாக கனடா செல்வதற்காக பெங்களூர் விமான நிலையம் சென்றபோது அவர் வைத்திருந்த கடவுச்சீட்டு போலியானது என கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பினையில் விடுவிக்கபட்டதையடுத்தது இலங்கை தப்பி செல்ல தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கி வந்துள்ளார்.
மேலும் கடந்த 13ம் திகதி யாழ்பாணத்தை சேர்ந்த ஸ்ரீராஜ் கனடா செல்வதற்காக சட்டவிரோதமாக படகில் வந்து நாகப்பட்டினத்தில் தங்கி இங்கிருந்துள்ளார். ஆனால் கடவுச்சீட்டு பெறுவதற்கு போதிய பணம் இல்லாததால் ஸ்ரீராஜும், பெங்களூரில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஹமில்டன் ஆகிய இருவரும் கடந்த 20ஆம் திகதி இரவு நாகப்பட்டிணம் கோடியக்கரையில் இருந்து சட்டவிரோதமாக இலங்கை யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளனர்.
இவர்களை அல்லைப்பிட்டி தீவில் வைத்து அந்நாட்டு கடற்படையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் யாருடைய உதவியுடன் தங்கியிருந்தார்கள் என்பது குறித்தும் இலங்கையில் இருந்து இவர்களை தமிழகத்திற்கு சட்டவிரோதமாக அழைத்து சென்றவர்கள் குறித்தும் இலங்கை உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் தமிழகத்தில் இவர்களுக்கு அடைக்கரலம் கொடுத்த நபர்கள் குறித்து தமிழக உளவுத்துறை அதிகாரிகளால் நாகப்பட்டிணம் கடற்கரைப் பகுதியில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.