முல்லைத்தீவு கடற்பரப்பில் இன்று அதிகாலை இந்திய றோலர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்தார்.
இரவு கடற்றொழிலுக்குச் சென்ற முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் மீன்பிடி படகுகளை அவதானித்ததாகவும் இன்று அதிகாலையே அவை இந்திய றோலர்கள் என முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் உறுதிப்படுத்திய நிலையில் இத்தகவலை உடனடியாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை உதவிப்பணிப்பாளருக்குத் தெரியப்படுத்தி இருப்பதாகவும் மாவட்டச் செயலர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களுக்கு இத்தகவலை அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
முல்லைத்தீவில் 2009 ஆம் ஆண்டின் பின்னர் இந்திய றோலர்கள் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களினால் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் தொழில் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.
கடந்த அரசிடமும் தற்போதைய அரசிடமும் மனு மூலமும் நேரடியாகவும் முறைப்பாடுகள் செய்யப்பட்டும் ஆர்ப்பாட்டங்கள் நடாத்தியும் எந்தவிதமான பயன்களும் கிடைக்காத நிலையில் சற்று இடைவெளிக்குப் பின்னர் இந்திய றோலர்கள் மீண்டும் முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து ஆறு கடல் மைல் தூரத்தில் மீன்பிடியில் தற்போது ஈடுபட்டுக் கொண்டிருப்பதன் காரணமாக முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர்.
இந்திய றோலர்களைக் கட்டுப்படுத்தி முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினைப் பாதுகாக்குமாறு வடமாகாண சபை மற்றும் மத்திய அரசு என்பவற்றிற்கு முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களின் சங்கங்களின் சமாசம் அவசரத் தகவலை அனுப்பியுள்ளது.