நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய டயகம மேற்கு தோட்ட சிறுமி யின் உயிரிழப்புகு நீதி கோரி, கொட்டகலை திம்புள்ள தோட்டத்தில் இன்று (27) பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
திம்புள்ள தோட்டத்தில் தோட்ட தொழிலாளர்கள் இந்தப்போராட்டத்தை தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் திம்புள்ள பகுதயில் உள்ள அம்மன் கோவிலுக்கு முன்பாக நடத்தினர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்பட வேண்டும், தரகர் முதல் சிறுமியை வேலைக்கு அமர்த்தியவர்கள்வரை இதனுடன் தொடர்புபட்ட அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.
அத்துடன், வீட்டுப் பணியாளர்களாக செல்லும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்தும், பெண்களுக்கான உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும் இதன்போது குரல் எழுப்பட்டது.