கடத்தப்பட்டு காணாமல் போன மற்றும் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் காணாமல் போன தமது உறவுகளுக்கு என்ன நடந்ததென்ற உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி, காணாமல் போனோரை கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் வவுனியாவில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
காணாமல் போனோரை தேடிக் கண்டறியும் குடும்பங்களின் சங்கங்கள் மற்றும் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த சிவில் சமூக பொது அமைப்புகள் இணைந்து இன்று (திங்கட்கிழமை) காலை இத் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் இன்று காலை பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், அதனைத் தொடர்ந்து வவுனியா நகரசபைக்குச் சென்று நகர சபை முன்றலில் இத் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் உயிருடன் இருக்கின்றார்களா இல்லையா? உயிருடன் இருந்தால் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்? உயிருடன் இல்லையென்றால் அவர்களுக்கு என்ன நடந்ததென்ற உண்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அத்தோடு, தடுப்பில் உள்ள சகல அரசியல் கைதிகளையும் விடுவித்து அவர்கள் தம் குடும்பத்தாரோடு சேர்ந்து வாழ வழியேற்படுத்தித் தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காணாமல் போன தமது உறவுகளை தேடித் தடுமாறு வலியுறுத்தி பல போராட்டங்கள் நடத்தப்பட்டு பலரிடம் கோரிக்கை விடுத்து எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையில், அரசாங்கம் இனியும் காலம் தாழ்த்தாது தமது உறவுகள் குறித்த உண்மையை இப்போதாவது வெளிப்படுத்த வேண்டுமென உறவுகளை தொலைத்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.