தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங்கம் உடன் ரத்துச் செய்ய வேண்டும் என்றும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில், சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் சட்டத்தரணி ஒருவர் அவரை சந்திப்பதற்கு முன்னர் வாக்குமூலம் பதிவுசெய்யப்படும் நடைமுறையை விலக்கிக் கொள்ள வேண்டுமெனவும் சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் ஜூவான் மெண்டஸ் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா. விசேட அறிக்கையாளர், குறித்த விஜயத்தின்போது சேகரித்த விடயங்களை தொகுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, சித்திரவதைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்து வழக்குத் தாக்கல் செய்வதற்கு எவ்வித தலையீடுகளும் அற்ற வகையில் பணியகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென்றும் சாட்சிகளுக்கான பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் வழங்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக குறித்த விசாரணை அலுவலகமானது தேசிய பாதுகாப்பு படையில் அங்கம் வகிப்பவர்கள் இடம்பெறாத வகையில் அமையப்பெற வேண்டுமென ஐ.நா. அறிக்கையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சர்வதேச குற்றவியல் விசாரணைகளை அங்கீகரிக்கும் ரோம் பிரகடனத்தில் கையெழுத்திட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் சாட்சிகளுக்கான பாதுகாப்பு குறைவாக காணப்படுவதாகவும், தடுப்பில் உள்ளோர் மீதான சித்திரவதைகள் தொடர்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர், இவற்றை தடுக்கும் வகையிலான நீதிக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா. விசேட அறிக்கையாளரின் குறித்த அறிக்கையானது, எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.