மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மற்றும் பெண்களை வெளியேற்ற முயன்ற பொலிஸார் அவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களின் ஆடைகளை பொலிஸார் கிழித்ததாக மாணவர்களை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற வலியுறுத்தி சென்னை மெரினாவில் 7வது நாளாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் என லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் நேற்று முதலே பொலிஸார் குவிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை ஏராளமான பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெண்கள், தாய்மார்கள் என்றும் பாராமல் பொலிஸார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் சிதறியோடியுள்ளனர்.
அப்போது பல பெண்களின் ஆடைகளை பொலிஸார் கிழித்ததாக கூறப்படுகிறது. தடியடியோடு நிறுத்தாமல் பெண்கள் மீது கைவைத்து அவர்களின் ஆடைகளை கிழித்ததாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் பொலிசார் போராட்டத்தை கலைக்க முற்பட்ட போது இளைஞர்கள் அனைவரும் கடல் அருகில் நின்றுகொண்டு மேலே கை வைத்தால் கடலுக்குள் குதித்து விடுவோம் என கூறியுள்ளனர்.
இதனால், பொலிசாரால் அவர்களை எதுவும் செய்ய முடியாமல் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.ஆனால், மதுரை அலங்காநல்லூரில் போராட்டத்தை கலைக்க பொலிசார் தடியடி நடத்தி வயதான முதியவர்கள், பெண்கள் என கூட பார்க்காமல் தங்களது காட்டுமிராண்டி தனத்தினை வெளிபடுத்தியுள்ளனர்.
இதில், ஒரு பெண்ணுக்கு தலை உடைந்து ரத்தம் பீரிட்டு வந்ததில் அவர் சுயநினைவு இழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.