கணவன் – மனைவியை ஒன்று சேர்த்து வைக்கும் வல்லமை காரடையான் நோன்பிற்கு உண்டு. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல. தெய்வங்களுக்கும் கூட பொருந்தும். ஒரு முறை கயிலாயத்தில் அம்பாள் சிவபெருமானின் திருக்கண்களை விளையாட்டாக மூடினாள்.
ஆதியும் அந்தமுமான அருட்பெருட்ஜோதியான பரமேஸ்வரனின் கண்கள் மூடப்பட்டதால் உலகம் முழுவதும் இருள் சூழ்ந்தது. இந்த பாவம் உமாதேவியை அடைய அவள் உருவம் மாறியது. பாவ விமோசனத்துக்காக அன்னை காஞ்சீபுரம் வந்து ஆற்றங்கரையில் மண்ணினால் சிவலிங்கம் செய்து பூஜை செய்தார்.
சிவபெருமான் திரு விளையாடலால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. அருந்துணைவரான சிவலிங்கம் கரைந்து போகாமல் காக்க காமாட்சி அம்மன் காரடையான் விரதத்தை மேற்கொண்டாள்.
இந்த விரதத்தை கண்டு மனம் மகிழ்ந்த சிவபெருமான் அன்னைக்கு தரிசனம் கொடுத்து காமாட்சியை மணந்து கொண்டார். ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மன் இந்த விரதத்தை அனுஷ்டித்ததால் இந்த நோன்பிற்கு காமாட்சி அம்மன் விரதம் என்று பெயர் ஏற்பட்டது.