திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை சுரங்க பாதைக்கு முன்னால் நேற்று (31) மாலை 4.30 மணி அளவில் கனரக லொறி மற்றும் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவர் வழியிலேயே உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியும் அதில் பயணித்த ஒருவரும் காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதன் பின் ஒருவர் மாத்திரம் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இதன்போது அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தரப்பு தெரிவித்துள்ளது. மற்றவர் கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கொட்டகலை பொரஸ்கிரிக் தோட்டத்தை சேர்ந்த ஆர். சுரேஷ்குமார் (வயது – 35) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவ்விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் – நுவரெலியா ஏ -7 பிரதான வீதியில் பத்தனை பகுதியிலிருந்து கொட்டகலை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும் ஹட்டனில் இருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த கனரக லொறி ஒன்றுமே கொட்டகலை சுரங்க பாதை பகுதியில் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்துடன் தொடர்புடைய லொறி, முச்சக்கரவண்டி ஆகியன பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படட்டுள்ளதுடன் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.